வெள்ள நிவாரண நிதியான ரூ.1 கோடியை பெற்றுக் கொள்ள தயங்குவது ஏன்? திமுக கேள்வி
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக தமிழக அரசின் சார்பில் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறாது. பல்வேறு சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் வெள்ள நிவாரணத்திற்காக நிதி வழங்கி வருகிறது. இந்நிலையில் திமுக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.1 கோடி தமிழக அரசுக்கு நிதி வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த பணத்தை பெற்றுக்கொள்ள அரசு தயக்கம் காட்டியதாகவும், எனவே சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை அறிவித்தபடி ரூ.1 கோடிக்கான காசோலையை அரசு நிதித் துறை முதன்மை செயலாளரிடம் வழங்கப்பட்டதாகவும் திமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் வெள்ள நிவாரண உதவிகளுக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டது. ஆனால், இதைப் பெற்றுக் கொள்ள அரசு தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தது. நிதியை வழங்க அனுமதி கோரிய போதெல்லாம் ஏதாவது சாக்குபோக்கு சொல்லப்பட்டது.
இதனால், அரசு நிதித் துறை முதன்மை செயலாளரை சந்தித்து திமுகவின் நிவாரண நிதி ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளேன்.
வெள்ள சேதங்களை தமிழக முதல்வர் இதுவரை நேரடியாக பார்வையிடவில்லை. இது மிகுந்த வேதனையளிக்கிறது. வெள்ள நிவாரணத்துக்காக தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி குறித்து வெள்ளை அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும்”
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.