வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான 35 தொகுதிகளுக்கும் நேற்று வேட்பாளர்களை அறிவித்த திமுக தலைவர் கருணாநிதி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தேர்தல் ஆறிக்கையை கருணாநிதி வெளியிட்டபோது அவருடன் அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
* நாடு முழுவதும் 10 லட்சம் மக்கள் நலப்பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தப்படும்.
* விவசாய கடன்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* கூட்டாட்சி முறையை மாநில சுயாட்சி அடிப்படையில் அமல்படுத்த வலியுறுத்தப்படும்.
* சென்னையில் ராயபுரம் ரயில் முனையம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.
* தூக்குத் தண்டனையை ஒழிக்க இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
* கச்சத்தீவு மீட்பு மற்றும் சேதுசமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டும்.
* சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை ரத்து செய்ய வேண்டும்.
* கொப்பரைத் தேங்காய், பச்சைத் தேயிலைக்கு கட்டுப்படியாகக் கூடிய ஆதார விலை வேண்டும்.
* நிதிகளை தேசிய மயமாக்குதல், நதிகள் இணைப்பு போன்றவற்றிற்கு முக்கியத்துவம்.
* மத்திய அரசு புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.
* பெட்ரோல், டீசல் எரிவாயு கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
* இடஒதுக்கீடு 50 சதவீதம் இருப்பதை மாற்ற சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
* வேலைவாய்ப்பில் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்.
* சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை வற்புறுத்துவோம்.
* நாடளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்கள் அதிக அளவில் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
* கல்வி, வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு உரிய இடம் வழங்க வேண்டும்.
* தேசிய அளவில் சுயமரியாதை திருமணச் சட்டம் கொண்டு வர வலியுறுத்துவோம்.
* மண்டல் கமிஷன் அறிக்கையை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தப்படும்.
* குளச்சல் துறைமுகத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.
* உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை ஏற்க வலியுறுத்துவோம்.
* இலங்கையின் போர்க்குற்றம் குறித்து இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்த தொடர் முயற்சி எடுக்கப்படும்.
* தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் இணை ஆட்சிமொழியாக வலியுறுத்தப்படும்.