மு.க.ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்படுவார்களா? பெரும் பரபரப்பு
தமிழக சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக உறுப்பினர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்டாலின், துரைமுருகன் உள்பட அனைவரும் சட்டமன்ற வளாகத்தில் போட்டி சட்டசபை கூட்டம் நடத்தினார்.
இந்நிலையில் சட்டமன்ற மாதிரிக் கூட்டம் நடத்தியதற்காக திமுக எம்.எல்.ஏக்கள் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் எந்நேரமும் அவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலை மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் மேலும் கூறியதாவது: என் மீதும், எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் 2 வழக்குகளை போட்டுள்ளார்கள். இதனால், எந்த நேரமும் நாங்கள் கைது செய்யப்படலாம். ஆனால், அந்த வழக்குகள் பெயிலில் வரக்கூடிய செக்ஷனில் தான் போட்டுள்ளார்கள்.
சட்டமன்ற மாதிரிக் கூட்டம் நடத்தியதற்காக எங்கள் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் எந்நேரமும் நாங்கள் கைது செய்யப்படலாம். இதற்கு காரணம், நாளை நடைபெற உள்ள காவல்துறை மானியக் கோரிக்கையில் ஜெயலலிதா பேசுவார். அப்போது, தி.மு.க. உறுப்பினர்கள் சட்டம் ஒழுங்கை பற்றி பேசக் கூடாது என்பதற்காக தி.மு.க.வினரை தடுக்கவே இந்த வழக்கு.
சட்டமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர். சட்டமன்றம் செயல்படுகிறதா?, இல்லையா என்றே தெரியாத நிலையில், சபாநாயகர் சர்வாதிகார போக்கை கடை பிடித்துள்ளார். .நாளை காவல்துறை மானிய கோரிக்கையிலே, எதிர்க்கட்சி இல்லாமல் ஜெயலலிதா பேச போகிறார். தி.மு.க. ஜனநாயக மாண்புகளை மதிக்கின்ற கட்சி. திட்டமிட்டு எங்களை வெளியேற்றி விட்டார்கள். இது, மக்கள் இந்த ஆட்சியை பற்றி புரிந்துக்கொள்ள நல்ல சந்தர்ப்பம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.