அதிமுகவை அடுத்து திமுகவிலும் கட்சி நிர்வாகிகள் அதிரடி மாற்றம்
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுக நிர்வாகிகள் மாற்றம் அதிரடியாக நடந்தது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தூக்கியடிக்கப்பட்டு அதற்கு பதிலாக இளைஞர்கள் எண்ட்ரி ஆனார்கள். இந்நிலையில் அதிமுகவை அடுத்து திமுகவிலும் தற்போது அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. கோவை மாநகர் வடக்கு, நாமக்கல் கிழக்கு, திருநெல்வேலி மேற்கு ஆகிய மாவட்டங்களின் திமுக பொறுப்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் எம்.வீரகோபால் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மு.முத்துசாமி கோவை மாநகர் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் செ.காந்திசெல்வன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, பார்.இளங்கோவன் நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மேற்கு மாவட்டக் கழகச் செயலாள கி.துரைராஜ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சிவ.பத்மநாபன் திருநெல்வேலி மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் அவர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”
இவ்வாறு அன்பழகனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.