ஸ்டாலின் நடத்தும் மாநாட்டில் ராகுல், மம்தா பானர்ஜி
பாராளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒருவருடம் கூட முழுதாக இல்லாத நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கும், கூட்டணிக்கும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி, மாநில சுயாட்சி மாநாடு ஒன்றை சென்னையில் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளார். குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மூத்த தலைவர்களான சரத்பவார், உமர் அப்துல்லா, மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் வகையில், இந்த மாநாட்டை நடத்த திமுக திட்டமிட்டிருப்பதாக, கூறப்பட்டாலும் இந்த மாநாட்டில் அழைப்பு விடுத்த அனைத்து தலைவர்களும் வருவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்