அரசியல் சண்டைக்கு நீதிமன்றத்தைப் பயன்படுத்த வேண்டாம். திமுகவுக்கு சென்னை ஐகோர்ட் கண்டனம்
திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிசிஐடியில் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றவேண்டாம் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தால் பரிசீலிக்கலாம் என்றும் மனுதாரருக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா கடந்த வாரம் உயரதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவரது தற்கொலை குறித்து விசாரணை செய்ய சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தமிழக டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவிட்டார்.
இந்நிலையில், விஷ்ணுபிரியா தற்கொலையை சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்தால் நேர்மையான விசாரணை இருக்காது என்றும் எனவே சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் திமுக உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். இந்த மனுவில் அவர் விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி அரசுக்கு கோர்ட் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரணை செய்த சென்னை ஐகோர்ட், மனுவை நிராகரித்தது. மனுவை திரும்ப பெறுவதாக கூறியதை தொடர்ந்து, மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும் தலைமை நீதிபதி கவுல் இதுகுறித்து கூறுகையில், ” நீதிமன்றத்தை அரசியல் போர்க்களமாக மாற்றாதீர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தால் பரிசீலிக்கலாம்” என்று குறிப்பிட்டு மனுவை விசாரிக்க மறுத்ததோடு, அரசியல் சண்டைக்கு நீதிமன்றத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கண்டனம் தெரிவித்தார்.