மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ பயணத்தால் திமுக நிர்வாகிகள் அதிருப்தியா?

மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ பயணத்தால் திமுக நிர்வாகிகள் அதிருப்தியா?
stalin
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 20-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ஆரம்பித்த ‘நமக்கு நாமே விடியல் மீட்பு’ பயணம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி திருச்சியில் நிறைவு பெறவுள்ளது. இந்த பயணம்  தூத்துக்குடி, மதுரை, தேனி, விருதுநகர் என  நடைபெற்று வரும் நிலையில், இந்த பயணத்தால் திமுக நிர்வாகிகள் கட்சி தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்டாலின் பயண நிகழ்ச்சிகளை முடிவு செய்ய என தனிக்குழு இருப்பதாகவும், நிகழ்ச்சிகள் வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தனிக் குழுவினரின் வழிகாட்டுதல்படிதான் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும், பல இடங்களில் மாவட்ட, ஒன்றியச் செயலாளர்கள் ஆகியோர்களை இந்த குழு கண்டுகொள்வதில்லை என்றும் திமுக நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பல இடங்களில் டிஜிட்டல் பேனர்கள், வரவேற்பு பதாகைகள் வைத்த நிர்வாகிகளை ஸ்டாலின் கடிந்து கொண்டதும் இந்த அதிருப்திக்கு இன்னொரு காரணமாக கூறப்படுகிறது.

இது குறித்து திமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பே ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சாலையோரக் கடைகளில் டீ குடிப்பது, ஆட்டோக்களில் பயணிப்பது என அவர் மக்களோடு மக்களாக பயணிப்பது கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் இதில் கட்சி நிர்வாகிகளின் பங்களிப்பு இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. தேர்தல் நேரத்தில் வேலை செய்ய வேண்டிய கட்சியினர் உற்சாகமாக இருக்க வேண்டும்.

தொண்டர்கள் பலத்தில்தான் எப்போதுமே திமுக சாதித்திருக்கிறது. தொண்டர்களை நம்பிதான் தேர்தலிலும் வெற்றிகளை கண்டிருக்கிறது. இதனை கட்சித் தலைமை மனதில் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்

Leave a Reply