பாமக பிரபலங்களை பணம் கொடுத்து வளைக்கிறதா திமுக? கொதிப்பில் ராம்தாஸ்
தேமுதிக தொண்டர்களை போலவே பாமக தொண்டர்களும் இம்முறை திமுகவுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் விஜயகாந்த் போலவே ராமதாசும் தொண்டர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்காமல் தனித்து நிற்கும் முடிவை எடுத்தார்.
இந்நிலையில் பாமகவின் இரண்டாம் நிலை தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும், அத்தகைய அதிருப்தி தலைவர்களை திமுகவுக்கு வேலை செய்யவும், அதிமுகவுக்கு எதிராக வேலை செய்யவும் பணம் கொடுத்து இழுக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளிவந்துள்ளது.
‘கடந்த 5 ஆண்டுகளில் ஜெயலலிதாவால் ராமதாஸ் பல தொல்லைகளுக்கு ஆளானார். திருச்சி சிறையில் உங்கள் அய்யாவை அடைத்தார். ஐம்பது பேர் பயன்படுத்தும் கழிப்பறையைப் பயன்படுத்த வைத்தார்கள். ‘அவருக்கு காற்று வசதி வரக் கூடாது’ என்பதற்காக சிறையில் இருந்த மரத்தையே வெட்டச் சொன்னார் ஜெயலலிதா. இதனால்தான் இருதய அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு ஆளானார் ராமதாஸ்.
அதேபோல், குருவை பலமுறை சிறையில் அடைத்தார். உங்கள் கட்சியை பல வகையிலும் வஞ்சித்தது அ.தி.மு.கதான். அதுவே, தி.மு.க ஆட்சியில் மத்திய அமைச்சர், இணை அமைச்சர் டி.என்.பி.எஸ்.சி தலைவர், மனித உரிமை ஆணையர், தேர்தல் ஆணையர், தேர்வாணைய உறுப்பினர்கள் என மிகப் பெரிய பதவிகளில் உங்கள் சமுதாயத்தை அமர வைத்து அழகு பார்த்தவர் கலைஞர். 1989, 91, 96 என பலமுறை தனித்துப் போட்டியிட்டும் ராமதாஸ் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்தமுறை பா.ம.க தனித்துப் போட்டியிடுவதால் ஜெயலலிதாவுக்குத்தான் நன்மை. அ.தி.மு.கவை வீழ்த்த வேண்டும் என நீங்கள் விரும்பினால், உங்கள் ஓட்டு தி.மு.க பக்கம் விழுந்தால் மட்டுமே சாத்தியம் என அவர்களிடம் பேச வேண்டும்’ என பாமக அதிருப்தி தலைவர்களிடம் திமுகவின் சீனியர் தலைவர்கள் அறிவுறுத்தியதாகவும், மேலும் வலுவாக இருக்கும் பா.ம.க நிர்வாகிகளின் செல்வாக்குக்கு ஏற்ப ஒரு லட்ச ரூபாய் முதல் ஐந்து லட்ச ரூபாய் வரையில் செலவு செய்யவும் திமுக ஏற்பாடு செய்துள்ளதாகவும் திமுக நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
துரைமுருகன், சிவசங்கர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என கட்சியின் சீனியர்கள் பலர் பா.ம.க நிர்வாகிகளை பெருமளவு வளைத்துவிட்டதாகவும் இந்த அதிரடியால் 40 தொகுதிகளில் திமுகவுக்கு சாதகமான நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட டாக்டர் ராமதாஸ் திமுக மீது கடுங்கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.