செயல்படுங்கள், அல்லது தள்ளி நில்லுங்கள்: திருச்சி மாநாட்டில் கமல் ஆவேசம்
காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட ஆணித்தரமாக செயல்படுங்கள், அல்லது பதவி விலகுங்கள், அதை செய்ய இங்கு சரியான ஆட்கள் இருக்கின்றனர் என்று நேற்று நடைபெற்ற திருச்சி மாநாட்டில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். அவர் இந்த மாநாட்டில் மேலும் கூறியதாவது:
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு நினைத்தால் தீர்வு உண்டு. ஆனால் அந்தத் தீர்வை நோக்கி தமிழக அரசு நகரவே இல்லை. மத்திய அரசின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு செயல்படுகிறது தமிழக அரசு. தீர்வு கிடைக்கும் என்று நினைக்கும்போது அரசியல்வாதிகள் புகுந்து குளறுபடி செய்து நமக்குள்ள உரிமையை தட்டிப்பறிக்கின்றனர். இப்போதாவது நமக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில், சட்ட நுணுக்கங்களைக் காட்டி, ஸ்கீம் என்றும், சில சாக்கு போக்குகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு தவறு என்று அழுத்தமாக கூறுகிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லையெனில் தமிழகம் அமைதியான முறையில் ஒத்துழைக்க மறுக்கும். வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை தான்.
காவிரி பிரச்சினைக்குத் தீர்வு காண செயல்படுங்கள் அல்லது தள்ளி நில்லுங்கள். காவிரி பிரச்சினையில் தீர்வு எட்ட முடியவில்லை என்றால் தமிழக ஆட்சியாளர்கள் ஆட்சியை விட்டு விலகட்டும்.
காவிரி பிரச்சினையில் நூற்றாண்டுகளாக தமிழக உரிமை பறிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும், எத்தனை கலவரம் தூண்டினாலும் திசை திரும்ப மாட்டோம். உண்ணாவிரதத்தில் நம்பிக்கையில்லை; உண்ணுவதில்தான் எங்களுக்கு நம்பிக்கையுள்ளது
நாங்கள் செயல்பட தொடங்கும்போது மக்கள் ஏமாற மாட்டார்கள். நாங்கள் ஏதோ மையமாக இருந்து கொண்டு, யார் கூடவும் சேர மாட்டோம் என்பதல்ல. சேர வேண்டிய நேரத்தில், சேர வேண்டியவர்களுடன் சேருவோம். நல்லவர்களுடன் சேருவோம். சூழ்ச்சி தேவையில்லை என்பது தான் எங்கள் அரசியல். ஊழல் ஒழிப்பே எங்களது முதல் பணி. முதல்வரானால் முதல் கையெழுத்து லோக் ஆயுக்தா அமைப்பது. இன்னும் 2 வாரத்தில் மய்யம் ஆப் வெளியிடப்படும், கட்சி உறுப்பினருக்கு மட்டுமே கிடைக்கும். 69 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரிப்போம்
ஒரு அமைச்சர் தொடர்ந்து என்னைப் பற்றி பேசி என்னிடம் சம்பளம் வாங்காத தொடர்பாளராக இருந்து வருகிறார், அதற்கு நன்றி. நான் சினிமாவில் அரசியல் செய்ததில்லை. அரசியலில் நடிக்க மாட்டேன்;
போலீஸாரைப் பாதுகாப்புக்காக வரவழைப்பதைக் குறைக்கவே ரயில் பயணம் மேற்கொள்கிறேன். நான் காந்தி ரசிகன், அதனால் ரயில் பயணத்தை விரும்புகிறேன்.”
இவ்வாறு கமல் பேசினார்.