நல்லப் பழக்கங்கள்… தீயப் பழக்கங்கள் எவை? இவற்றை எப்படி தீர்மானிப்பது? முன்னெல்லாம் உடல் – மன ரீதியாக ஒருவருக்கு நலம் பயக்கும் பழக்கவழக்கங்கள் நல்லவை எனக் கூறப்பட்டது. தீங்கு விளைவிப்பவை தீயவை. ஆனால், மாறி வருகிற வாழ்க்கைச் சூழலில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மோசமான பழக்கங்களைக்கூட தீயவை என அறியாமலே செய்துகொண்டிருக்கிறோம்.
1. அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல்:
நிச்சயமாய் இது கெட்ட பழக்கம்தான். “மிகவும் அதிகமாகப் பசித்தால்தான் அதிக உணவை உட்கொள்வேன்!” என்பது உண்மையில்லை. காலம் காலமாய் உண்ணும் உணவு வயிற்றுக்குப் போதுமானதாகவே இருந்தாலும், வயிறு முழுமையாக நிறைந்த பின்னரே சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ளப் பழகிவிட்டோம்.
2. உணவுக்குப் பின்னர் ஒவ்வொரு முறையும் இனிப்பு:
ஒவ்வொரு முறையும் சாப்பாட்டுக்குப் பிறகு இனிப்பு சாப்பிடுவதற்கு எந்தவொரு உடல்சார்ந்த காரணங்களும் இல்லை. நாமாகப் பழக்கப்படுத்திக் கொண்ட இந்த வழக்கத்தை நிறுத்தினால்தான் இனிப்பினால் நம் உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு குறையும்.
3. மிகவும் குறைவான நேரமே தூங்குதல்:
இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுவது இந்தப் பழக்கத்தால்தான். அலுவலகம், பின்னர் சமூக ஊடகங்கள், சினிமா, தொலைக்காட்சி என ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான பொழுதுபோக்கு. பின்னிரவு தாண்டியும் நீளும் இந்தப் பழக்கத்துக்கு நாம் அடிமையானாலும், நம் உடல் அதை ஏற்றுக் கொள்வதில்லை. நோய், வலி, துக்கம், மன அழுத்தங்கள் இல்லாத முழுமையான உறக்கம் நம் ஒவ்வொருவருக்கும் அவசியத் தேவை.
இட்ட நிலைத்தகவலுக்கான கருத்துக்களை வாசிக்க வேண்டும் என்பதையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, அவைகளுக்கென குறிப்பிட்ட நேரத்தை வகுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் அத்தகைய விஷயங்களில் கவனம் செலுத்தக் கூடாது. தூங்கப்போவதற்கு குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் முன்பாக வாசிப்பையோ, மெல்லிசை கேட்பதையோ வழக்கப்படுத்திக் கொள்ளலாம்.
4. உடல் இயக்கம் இல்லாமலே இருப்பது:
மனித உடல் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். உடல் உறுப்புகளின் இயக்கம் குறையும் போதுதான் பிரச்சினை தொடங்குகிறது. வளர்ந்துவரும் அறிவியலும் தொழில்நுட்பமும் சின்னக் கையசைவிலேயே பெரும்பாலான வேலைகளைச் சாத்தியப்படுத்திவிட்டது.
சிறிதாவது நடை போட வேண்டும். லிஃப்ட் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள். குறைவாகவே அமருங்கள். காரணம் இல்லாமல் நில்லுங்கள். தரையில் சம்மணமிட்டு உட்காரப் பழகலாம்.
5. சின்ன விஷயத்துக்குக்கூட தன்னிலை இழத்தல்:
குறைவான தூக்கம், அதிகச் சாப்பாடு, உடல் இயக்கமின்மை, வேலைப்பளு போன்ற மேற்சொன்ன காரணங்களால்தான், சின்னச் சின்ன விஷயங்களுக்கே கோபப்பட்டு, தன்னிலை இழக்க நேரிடுகிறது.
மாறி வரும் காலங்கள், வேறுபட்ட கலாச்சாரங்களை உட்புகுத்தினாலும், அடிப்படையான நல்ல பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டியது இப்போதைய அவசர, அவசியத் தேவை. அவையே நம்முள் தொலைந்து போய்க் கொண்டிருக்கும் உடல், மன நலத்தையும், மனிதத்தையும் மீட்டெடுக்கும்.