வழுக்கை தலையில் முடியை நட்ட மருத்துவ கல்லூரி மாணவர் மரணம்.

வழுக்கை தலையில் முடியை நட்ட மருத்துவ கல்லூரி மாணவர் மரணம்.

bald_headவழுக்கை தலையில் முடியை நட அழகு நிலையம் சென்ற மருத்துவக்கல்லூரி மாணவர் ஒருவர் உயிரை இழந்த சம்பவம் சென்னை நகரையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

நான்கு வருட மருத்துவ படிப்பை முடித்த சந்தோஷ்குமார் என்ற மாணவர் சந்தோஷமாக பயிற்சி எடுத்து வந்த நிலையில் அவரது சந்தோஷத்தை குறைக்கும் வகையில் அவர் தலைமுடி கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி ஒரு கட்டத்தில் வழுக்கை தலையாக மாறிவிட்டது.

வழுக்கை தலையுடன் இருந்தால் யாரும் பெண் தரமாட்டார்கள் என்பதால் அழகு நிலையத்திற்கு சென்று செயற்கை முறையில் தலையில் முடி நட சென்றார். தலையில் ஊசி மூலம் முடிகளை நடும் போது வலியை பொறுத்துக் கொள்ள டாக்டர் ஹரிபிரசாத், சந்தோஷ்குமாருக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார். காலையிலிருந்து மாலை வரை முடி நடும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையை டாக்டர் வினித் செய்துள்ளார். அப்போது, சந்தோஷ்குமாருக்கு தலைசுற்றல், மயக்கம் வந்துள்ளது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர்கள் சந்தோஷ்குமாரை அழைத்துச் சென்றுள்ளனர். இதன்பிறகு நிலைமை மோசமானதும் வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் சந்தோஷ்குமார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் செந்தில் விசாரணை நடத்தி வருகிறார். சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவத்துறை வட்டாரங்கள் கூறுகையில், “பண சம்பாதிக்கும் ஆசையில் மக்களின் உயிரோடு விளையாடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக அழகு நிலையங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் முறைகேடாக நடக்கின்றன. முடி நடுவதற்காக 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். அதை நம்பி பலர் ஏமாந்து செல்கிறார்கள். 40 வயதை கடந்த பெண்கள் முகத்தில் விழும் சுருக்கத்தை பார்த்து துடித்து போகிறார்கள். அதை போக்குவதற்காக ‘போட்டாக்ஸ்’ என்ற ஊசியை போட்டுக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்கின்றன. சரியான மருத்துவ உபகரணங்கள், டாக்டர்கள் வசதி இல்லாமல் இந்த மாதிரி சிகிச்சை அளிப்பது குற்றமாகும். உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே மக்கள் விழிப்பு உணர்வாக இருக்க வேண்டும். அழகுக்கு ஆசைப்பட்டு உயிரை இழப்பதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற அழகு நிலையங்கள் குறித்து மருத்துவ கவுன்சிலிடம் புகார் கொடுக்கலாம்” என்றனர்.

Leave a Reply