டாக்டர் இல்லாததால் அவலம்

கரீம்நகர்: ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு வந்த பெண் ஒருவருக்கு டாக்டர் இல்லாததால் நர்சுகளே அறுவை சிகிச்சை செய்ததில் அந்த பெண் பரிதாபமாக இறந்தார். ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ராமகுண்டம் பகுதியை சேர்ந்த காவ்யா என்ற 28 வயது கர்ப்பிணிக்கு கடந்த சனிக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்குள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரவு முழுக்க அவருக்கு வலி இருந்தது. குழந்தையின் தலை திரும்பி இருந்த காரணத்தால் சுகப்பிரசவம் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சிசேரியன் செய்ய முடிவு செய்யப்பட்டது. தீபாவளிக்காக விடுமுறையில் சென்ற டாக்டர் பணிக்கு வரவில்லை. வேறு வழியில்லாமல் அங்கிருந்த இரண்டு நர்சுகளே ஆபரேஷன் செய்ய முடிவு செய்தனர். ஆபரேஷன் தியேட்டர் கொண்டு சென்று சிசேரியன் அறுவை சிகிச்சை செய்தனர். இதில் பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. ஆபரேஷனின் போது அதிக அளவில் ரத்தம் வெளியேறியது. இதற்கு உடனடியாக மாற்று ரத்தம் கொடுக்கவில்லை. ரத்த போக்கை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் நர்சுகளுக்கு தெரியவில்லை என கூறப்படுகிறது. ஆபரேஷன் தியேட்டரிலிருந்து சாதாரண வார்டுக்கு காவ்யா மாற்றப்பட்டார். ரத்தப்போக்கு நிற்காததை தொடர்ந்து பயந்து போன நர்சுகள் டாக்டருக்கு போன் செய்தனர். அவர் வருவதற்குள் காவ்யா உயிரிழந்தார்.ஆத்திரமடைந்த காவ்யாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் தலையிட்டு போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட டாக்டர் மற்றும் நர்சுகளிடம் விசாரணை நடத்துவதாக உறுதி அளித்தனர். இதற்கிடையில் காவ்யா மரணம் குறித்து விசாரிக்க மாவட்ட மருத்துவ அதிகாரி தலைமையில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நர்சுகள் அறுவை சிகிச்சை செய்ததால் கர்ப்பிணி பெண் இறந்தது கரீம் நகர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply