இளம்பெண்ன் ஒருவரின் தொடையில் உள்ள கொழுப்பை எடுத்து அதன் உதவியால் அந்தப் பெண்ணிற்கு மார்பகத்தை உருவாக்கி டெல்லியைச் சேர்ந்த மருத்துவர்கள் சாதனை புரிந்து உள்ளனர்.
மத்தியபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் `போலந்து சிண்ட்ரோம்` என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். பிறவிக்குறைபாடு நோயான `போலந்து சிண்ட்ரோம்`, பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு சிறுவயதில் இருந்தே இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
நோய் பாதிப்புக் காரணமாக சிறுமிக்கு மார்பகம் ஒருபுறம் வளர்ச்சி அடையாமல் இருந்தது. இதனால் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அந்த இளம்பெண்ணுக்கு, அவருடைய தொடையில் உள்ள கொழுப்பினை எடுத்து மார்பகம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, புதுடெல்லி ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையின் பிளாஸ்டிக் மற்றும் காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை துறையின் நிபுணர் டாக்டர் விவேக் குமார் கூறுகையில்,” போலந்து சிண்ட்ரோம் என்பது ஒரு மரபணு குறைபாட்டுப் பிரச்னையாகும். இது இளம்பெண்ணின் பருவ வயதில் தோன்றியுள்ளது. இதன் காரணமாக அவருடைய ஒருபகுதி மார்பகம் வளர்ச்சி அடையவில்லை. மேலும் மார்பு நெஞ்சுப் பகுதியின் சதைக்குள் சிக்கிக் கொண்டது. 23 வயதாகும் இளம் பெண்ணான இவர், பருவம் அடைந்தபோது தனக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நோய்க்கு தீர்வு காண பல்வேறு மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை கேட்டு உள்ளார். பின்னர் இணைய தளங்களிலும் மார்பகக் குறைபாடு பற்றியும், அதற்கான தீர்வு குறித்தும் தேடிவந்துள்ளார்.
பின்னர் தொடையில் உள்ள கொழுப்பை எடுத்து மார்பகத்தைத் திரும்ப கொண்டுவரலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்” என்று கூறினார்.
இந்தக் கொழுப்பு ஒட்டுதல், கொழுப்பு மாற்றுதல் மற்றும் கொழுப்பு ஊசி ஆகியவை முற்றிலும் இயற்கையானது, `போலந்து சிண்ட்ரோம்` நோயினால் உண்டான பாதிப்பு காரணமாக ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண சிறிய அறுவை சிகிச்சை மூலம் தொடையில் இருந்து கொழுப்பு எடுக்கப்படுகிறது.
மருத்துவ உலகில் உள்ள நடைமுறையின்படி, கொழுப்பு மனிதனின் உடலின் தொடை, வயிறு அல்லது பின்பகுதியில் இருந்து எடுக்கப்படுகிறது.
பின்னர் அவை ஆரோக்கியமான செல்கள் இல்லாத உடலின் பிற பாகங்களுக்கும் இடங்களுக்கும் கவனமாக இட மாற்றம் செய்யப்படுகிறது.இதே போலவே இந்த இளம் பெண்ணுக்கும் அவரின் குறைபாடு கொண்ட மார்பகங்களை சரிசெய்ய `கொழுப்பு ஒட்டுதல் ` முறையில் சிகிச்சை செய்யப்பட்டது.
இது மருத்துவ உலகில் மிகவும் நவீன முறையாகும். தற்போது இம்முறை சமீபத்தில்தான் இந்தியாவிற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.