உலகில் இதுவரை யாருக்கும் வராத ஒரு புதுவிதமான நோய் மும்பையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு வந்துள்ளது. சாதாரணமாக எல்லோருக்கும் 32 பற்கள்தான் இருக்கும். ஆனால் இந்த வாலிபருக்கு 232 பற்கள் இருந்துள்ளது. இதனை மும்பை டாக்டர்கள் ஏழு மணிநேரம் சர்ஜரி செய்து அகற்றி சாதனை செய்துள்ளனர்.
மும்பையை சேர்ந்த 17 வயது வாலிபர் ஆஷிக் காவ் என்ற வாலி பர், கடந்த சில நாட்களாக பல்வலியால் அவதிப்பட்டு வந்தார். அவரை பரிசோதித்த உள்ளூர் டாக்டர்கள் சாதாரண பல்வலிக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் தொடர்ந்து அந்த வாலிபருக்கு பல்வலி இருந்ததால், அவரை மும்பையில் உள்ள ஜெ.ஜெ. மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குள்ள பல் மருத்துவ நிபுணர் ஒருவர் அந்த வாலிபரை சோதனை செய்தார்.
அவர் தன்னுடைய சோதனையின்போது, அந்த இளைஞரின் ஈறுகளின் உள்ளே ஏகப்பட்ட பற்கள் இருந்ததை கண்டுபிடித்தார். பின்னர் மருத்துவர்கள் குழு அந்த இளைஞருக்கு சுமார் ஏழு மணிநேரம் சர்ஜரி செய்து ஈறுகளுக்கு உள்ளே உள்ள பற்களை அகற்றினர். பற்கள் வெளியே எடுக்க எடுக்க வந்துகொண்டே இருந்ததாகவும், அவரிடம் இருந்து மொத்தம் 232 பற்கள் அகற்றப்பட்டதாகவும் ஜெ.ஜெ. மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறினார். இதுவரை உலகில் யாருக்கும் இதுபோன்ற குறைபாடு வந்ததில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.