அமெரிக்க ராணுவத்தில் மாற்று பாலினத்தவர்களுக்கு தடை: டிரம்ப் உத்தரவு
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது ஒரு புதிய நடவடிக்கையாக அமெரிக்க ராணுவத்தில் இனி மாற்றுப் பாலினத்தவர்களை பணியமர்த்த தடை விதிக்கும் உத்தரவு ஒன்றில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியுள்ளதாவாது: ராணுவத்தை சேர்ந்த மூத்த உயரதிகாரிகள் மற்றும் பிற தலைவர்களின் தீவிர ஆய்வுக்கு பின்னர் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் பரிந்துரையின்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப்பின் இந்த புதிய உத்தரவுக்கு ஹிலாரி கிளிண்டன் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தற்போது அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிவரும் மாற்றுப் பாலினத்தவர்களின் வேலைக்கு இந்த புதிய உத்தரவால் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.