கான்சாஸ் துப்பாக்கி சூடு. தவறுதலாக சுட்டுவிட்டதாக கொலையாளி வாக்குமூலம்
அமெரிக்காவின் கான்ஸாஸ் பகுதியில் ஐதராபாத்தை சேர்ந்த சீனிவாசன் என்ற பொறியாளர் கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இந்தியாவை மட்டுமின்றி உலகையே உலுக்கியது. இனவெறியால் நடந்த இந்த கொலைச்சம்பவத்திற்கு அமெரிக்கர்கள் உள்பட உலகின் அனைத்து நாட்டை சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் கொலையாளி கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின்போது, தன்னால் சுட்டுக்கொல்லப்பட்டவர் இந்தியர் என்று தனக்கு தெரியாது என்றும் அவரை மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர் என நினைத்து தவறுதலாக சுட்டுவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக அமெரிக்க போலீசார் தெரிவித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சீனிவாசனின் உடல் நேற்று தகனம் செய்த பின்னர் இந்த சம்பவத்திற்கு மிகவும் தாமதமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். ”கான்சாஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் யூத மையத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது போன்ற சம்பவங்களுக்கு தனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாகவும், இது போன்ற செயல்களை எப்போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.