“சில நிமிடங்களில் தயார்” என விளம்பர வார்த்தைகளால் வசீகரிக்கும் நூடுல்ஸில் ஈயம் (Lead) கலந்திருப்பதாக அச்சுறுத்தும் தகவலை வெளியிட்டிருக்கிறது உத்தரப்பிரதேச அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து மேலாண்மை நிறுவனம் (The Food Safety and Drug Administration (FSDA)).
உணவில் 0.01-2.5 பிபிஎம் (ppm) என்ற அளவில் மட்டுமே ஈயம் கலந்திருக்க அனுமதி உண்டு. ஆனால், நூடுல்ஸில் 17.2 பிபிஎம் அளவுக்கு ஈயம் கலந்துள்ளது என்கின்றனர் ஃஎப்.எஸ்.டி.ஏ அதிகாரிகள். இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட, ஏழு மடங்கு அதிகம். குறைந்த அளவில் ஈயம் சேர்க்கப்பட்ட உணவைச் சாப்பிட்டாலே, குழந்தைகளின் மூளைத்திறன் (ஐ.கியூ) குறையும், ரத்தசோகை ஏற்படும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
நூடுல்ஸ் என்பது அவசியம் சாப்பிட வேண்டிய உணவே அல்ல. அதில், நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள் என எந்தச் சத்துக்களுமே இல்லை என்பதுதான் உண்மை. முழுவதுமே மைதாவினால் தயாரிக்கப்பட்டது. கொழுப்பு, உப்பு, மாவுச்சத்து, செயற்கை சுவையூட்டி ரசாயனங்கள் போன்றவை மட்டுமே பிரதானமாக உள்ளன. இதில், தற்போது அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதலான அளவு ஈயம் உள்ளது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஈயம் விஷத்தன்மை கொண்டது. இதைச் சாப்பிட்டால், உடல் உறுப்புகள் பாதிக்கும். நரம்புப் பிரச்னைகள் ஏற்படும். கடுமையான வயிற்றுவலி வரலாம். வாய் மற்றும் தொண்டை எரிச்சல், அலர்ஜி, தலைவலி போன்ற உபாதைகளும் வரலாம். கருவுற்ற பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் கரு பாதிக்கலாம்.
செரிக்காத உணவு நூடுல்ஸ்…
பொதுவாக, நூடுல்ஸ் இந்திய உணவே அல்ல. பாரம்பரிய உணவுகளை மட்டுமே நம் உடல் ஏற்கும். நம் மரபியல்ரீதியான பழக்கமும் அதுவே. உடலும் அப்படித்தான் பழகி இருக்கும். சுவைக்காக நூடுல்ஸை விரும்பிச் சாப்பிட்டாலும், அவை செரிக்க இரண்டு நாட்கள் ஆகும். அதில் சேர்க்கப்பட்ட பதப்படுத்திகள், ரசாயனங்கள், அதிக அளவிலான உப்பு, வழவழப்புடன் இருக்க மெழுகு போன்றவை செரிக்க, சில நாட்களாவது பிடிக்கும். இத்தகைய உணவை நாம் சாப்பிடுவதால் உடல் பருமன் ஏற்படும். உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, நாளடைவில் நோய்களின் பிடியில் தள்ளப்படுவோம்.
குழந்தைகள், நூடுல்ஸை அதிகம் விரும்பக் காரணம்?
மோனோசோடியம் க்ளுட்டமேட் என்ற சோடியம் உப்பு, ஒரு சுவையூட்டி. ஒரு வகையான அமினோ அமிலம். இது, தன் சுவையால் ஒருவரை அடிமையாக்கும் குணம் கொண்டது. குறிப்பாக, குழந்தைகளை மீண்டும் மீண்டும் இதே உணவைச் சாப்பிட வைப்பதற்காக, நூடுல்ஸில் மோனோ சோடியம் க்ளுட்டமேட்டின் அளவை அதிகம் சேர்த்துத் தயாரிக்கின்றனர். குழந்தைகள் நூடுல்ஸை விரும்பிச் சாப்பிடுவதற்கு இதுவே காரணம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இந்த உப்பு கெடுதியையே உண்டாக்கும். அதிகப்படியான உப்பால் உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, மூட்டு வீக்கமடைதல், மறதி, கவனச்சிதறல் போன்ற பாதிப்புகள் வரலாம். அடிக்கடி தலைவலி, சிறுநீரகப் பாதிப்பு போன்ற அவஸ்தைகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உண்டு.
ஐந்தே நிமிடங்களில் ஆரோக்கிய உணவு!
நேரமின்மை காரணமாக ‘ சில நிமிடங்களில் உணவு தயார்’ என்பதால், பெற்றோர்களும் நூடுல்ஸ் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். குழந்தைகளும் அதன் சுவைக்கு அடிமையாகி, ‘நூடுல்ஸ் தந்தாலே போதும்’ என்று திருப்தி அடைகின்றனர். அதே இரண்டு நிமிடங்களில், சிவப்பு அவல் மற்றும் கேழ்வரகு மாவைக்கொண்டு விதவிதமான ரெசிப்பிகளைச் செய்துகொடுக்கலாம்.
முந்தைய இரவு ஊறவைத்த கொண்டைக் கடலை, பச்சைப் பயறு, ராஜ்மா, மக்காச்சோளம் போன்ற சுண்டல் வகைகளை, குக்கரில் வைத்துச் சமைத்தால், இரண்டு நிமிடங்களில் தயாராகிவிடும்.
காய்கறி சாலட், ஃப்ரூட் சாலட், பிரட் டோஸ்ட் போன்றவை தயார் செய்ய, ஐந்து நிமிடங்கள் போதும்.
கேரட் ஜூஸ், பேரீச்சை ஜூஸ், தேங்காய் பால் போன்ற ஆரோக்கிய பானங்கள் செய்வதற்கான நேரமும் குறைவுதான்.
இப்படி, ஆரோக்கிய உணவுகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதால், குழந்தைகளுக்கு நோய்கள் நெருங்காது. பணமும் விரயமாகாது. உடல் ஆரோக்கியமும் பெருகும். சுவையான, ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுவதற்கு, அதிக அக்கரை, கொஞ்சம் மெனக்கெடுதல் போதும். இதுதான் பெற்றோர்கள், பிள்ளைகளுக்குத் தரும் ஆரோக்கிய செல்வம்.
தொடரும் ஆய்வுகள்…
ஒரு குறிப்பிட்ட பிராண்ட் நூடுல்ஸ் மட்டுமல்ல, சில ஆண்டுகளுக்கு முன்பு அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்புஉணர்வு ஆராய்ச்சி மையம், 15 நிறுவனங்களின் நூடுல்ஸை ஆய்வு செய்தது. இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில், நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி கொழுப்பு, சோடியம் போன்றவை இருந்தது கண்டறியப்பட்டது.