காவிரி பிரச்சனையில் தகராறு வேண்டாம். கடல் நீரை பயன்படுத்துங்கள். தமிழக அரசுக்கு சுவாமி அறிவுரை
காவிரி நீருக்காக கர்நாடகத்திடம் தகராறு செய்வதற்கு பதிலாக கடல் நீரின் உப்புத்தன்மையை நீக்கிவிட்டு அதை குடிப்பதற்கு விவசாயத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி அறிவுரை கூறியுள்ளார். தமிழக விவசாயிகள் சுப்பிரமணியன் சுவாமி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நேற்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சுவாமி கூறியபோது, ‘தமிழக மக்களுக்கு காவிரி தண்ணீர்தான் வேண்டுமா அல்லது தண்ணீர் வேண்டுமா? இஸ்ரேல், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் கடல் தண்ணீரில் உள்ள உப்பை நீக்கி குடிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
கர்நாடகாவுடன் தகராறு செய்துகொண்டு இருப்பதற்குப் பதிலாக, தமிழகம் கடல் நீரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதில் உள்ள உப்பை நீக்கி குடிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் சுப்பிரமணியன் சுவாமி காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக இருப்பது தெரிய வந்துள்ளதாக பலர் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.