ஏடிஎம் ரசீதை குப்பையில் போட வேண்டாம். சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை
பெரும்பாலானோர் ஏடிஎம்-ல் பணம் எடுத்தவுடன் மிஷினில் இருந்து வரும் ரசீதை அங்கு இருக்கும் குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவது வழக்கம். ஆனால் அந்த ரசீதை எடுக்கும் ஹேக்கர்கள் அதில் உள்ள விபரங்களை வைத்து பணத்தை திருடும் வாய்ப்பு இருப்பதாகவும் எனவே ஏடிஎம் ரசீதை குப்பை தொட்டியில் போட வேண்டாம் என்றும் சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
சேலத்தில், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்ட சம்பவம் ஒன்றில் விசாரணை செய்தபோது பெரியசாமி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் ஏ.டி.எம்., மையங்களில் கிடக்கும் ரசீதுகளை எடுத்து, அதன் மூலம், வங்கிக் கணக்கு விபரங்களை பெற்று பணம் திருடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் ரசீதுகளில், வங்கிக் கணக்கின், கடைசி நான்கு எண்கள் மட்டுமே இருக்கும். இந்த எண்களை வைத்து, ஒருவரின் வங்கிக் கணக்கில், பணத்தை எடுத்துவிட முடியாது. இருப்பினும் குறிப்பிட்ட அந்த கடைசி நான்கு எண்களை வைத்து, வங்கி அதிகாரிகளின் துணையுடன், வாடிக்கையாளர்களின் கணக்கு விபரங்கள் பெற வாய்ப்பு இருப்பதாகவும், இதன்மூலம், வங்கிக் கணக்கில் இருந்து, ‘ஆன்லைன்’ மூலம் பொருட்களை வாங்கி, மோசடி செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சைபர் க்ரைம் போலிசார் எச்சரித்துள்ளனர்.