காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மகன் ராகுல்காந்தி, உத்தரபிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்யவந்த அவருடைய சகோதரி பிரியங்கா காந்தி “பாரதீய ஜனதா வேட்பாளராக களமிறங்கியுள்ள தனது ஒன்றுவிட்ட சகோதரர் வருண்காந்திக்கு ஓட்டு போடக் கூடாது என ஆவேசமாக பேசினார். இதற்கு வருண்காந்தியின் தாயார் மேனகா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி தனது பிரச்சாரத்தில், ‘வருண்காந்தி எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்தான். அவர் எங்கள் சகோதர் என்பதில் சிறிது சந்தேகம் இல்லை. ஆனால் அவர் தவறான பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். அவர் தவறான பாதையை தேர்ந்தெடுக்கும்போது அவரை திருத்தி நல்ல பாதைக்கு திருப்பும் முயற்சியை பெரியவர்கள் எடுக்கவேண்டும். எனவே மக்களாகிய நீங்கள் அவரை தோல்வியடைய செய்து, கெட்ட பாதையில் இருந்து நல்ல பாதைக்கு திருப்புங்கள். இது உங்கள் கடமை. எனவே எனது சகோதருக்கு ஓட்டளிக்க வேண்டாம் என்று பேசினார்.
பிரியாங்காவின் இந்த பேச்சுக்கு வருண்காந்தியின் தாயார் மேனகா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். யார் தவறான பாதையில் சென்றனர் என்பது தேர்தல் முடிந்தபிறகு தெரிந்துவிடும். நான் என் மகனை நல்ல முறையில்தான் வளர்த்துள்ளேன். அவர் எந்த சந்தர்ப்பத்திலும் தவறான பாதைக்கு செல்ல மாட்டார் என்று கூறியுள்ளார்.