விவசாயிகள் தங்களது முயற்சியில் முன்னேற வேண்டும். அரசை நம்பி இருக்கக் கூடாது என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்து உள்ளார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நேற்று மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி என்ற இடத்தில் விவசாய பொருட்களின் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,
”விவசாயிகளாகிய நீங்கள் தான் உங்களது வாழ்வின் சிற்பிகள். நீங்கள் கடவுளையும், அரசையும் நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. உங்களது முயற்சியில் முன்னேறுங்கள். உங்களுக்கு உரியவைகளை சீர்படுத்துவதிலும், உங்களது வாழ்க்கையை மாற்றுவதிலும் நீங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும்.
விவசாயிகள் தங்களது மனநிலையை மாற்றி கொண்டு, முறையான பயிற்சி எடுத்தால் விவசாயம் தானாகவே மாறிவிடும். விளைச்சல் பாதிக்கப்பட்டாலும், நம்பிக்கையை கைவிட்டு விடாதீர்கள். பயிரிடும் முறையை கற்றுக் கொள்ளுங்கள். மாற்றம் அதற்கேற்ப நிகழும்” என்று கூறினார்.
நாட்டின் முதுகெலும்பான விவசாய தொழிலை செய்து வரும் விவசாயிகள் தங்கள் சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும் என்றும் எதற்கெடுத்தாலும் மத்திய அரசை நம்பி இருக்கக்கூடாது என்றும் மத்திய அமைச்சர் ஒருவர் பேசியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.