கச்சத்தீவை ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை. இலங்கை அமைச்சர் அதிரடி பதில்
நேற்று முன் தினம் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தபோது கொடுத்த கோரிக்கை மனுவில் முக்கிய இடம் வகித்த கோரிக்கை கச்சத்தீவை மீண்டும் மீட்க வேண்டும் என்பதுதான். இந்நிலையில் கச்சத்தீவு பிரச்சினை முடிந்து போன ஒன்று, கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை அமைச்சர் அகிலவிராஜ் கரியவசம் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவு கடந்த 1974ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. ஆனாலும் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் ஓய்வு எடுக்கவும், வலைகளை காயப்போடவும் அனுமதிக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தை மீறி இலங்கை கடற்படையினர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், பிடித்துச் சென்று சிறையில் அடைப்பதும் நீடித்து வருகிறது.
எனவே கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். சமீபத்தில் டெல்லி சென்ற முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மோடியிடம் நேரில் வலியுறுத்தினார்.
இந்நிலையில் கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க முடியாது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதுபற்றி இலங்கை கல்வி மந்திரி அகிலவிராஜ் கரியவசம் கொழும்பில் நிருபர்களிடம் கூறுகையில், கச்சத்தீவு பிரச்சினை முடிந்து போன ஒன்று கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க முடியாது. இரு நாடுகளால் பேசி தீர்க்கப்பட்ட ஒன்றை மீண்டும் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
Dont talk about Kachatheevu said Srilanka Minister