அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து’ – என்பது உணவுக்கு மட்டுமல்ல உடற்பயிற்சிக்கும் பொருந்தும். உடலை ஃபிட்டாக வைத்திருக்க சிலர் மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்வார்கள். இதனால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.
‘எல்லாவிதமான உடற்பயிற்சியையும் எல்லோரும் செய்துவிட முடியாது. அவரவர் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ப, மருத்துவர் அல்லது உடற்பயிற்சி ஆலோசகரிடம் ஆலோசனைப் பெற்று, அதன்அடிப்படையில்தான் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்’ என்கிறார் ஈரோடு ஃபிட்னெஸ் ஒன் உடற்பயிற்சி மையத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் பிரவீண் குமார். இதுபற்றி மேலும் அவர் பேசும்போது… ‘உடற்பயிற்சியை கார்டியாக் பயிற்சி, வெயிட் பயிற்சி என்று இரண்டு வகையாகப் பிரிப்போம். வாக்கிங், ஜாக்கிங், ஏரோபிக் உள்ளிட்டவை கார்டியாக் பயிற்சிகள். ஜிம்மில் செய்யக்கூடிய கடுமையான பயிற்சிகள் வெயிட் பயிற்சிகள். இந்த இரண்டு பயிற்சிகளுமே உடலுக்கு மிகமிக அவசியம். கார்டியாக் பயிற்சிகள் செய்யாமல், அதிக எடை தூக்கும் பயிற்சிகளைச் செய்பவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்புண்டு. எனவே, சரிவிகித பயிற்சிகள் அவசியம்.
அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படக்கூடிய, முதல் பக்கவிளைவு உடல் வலி. தினமும் கடுமையான உடற்பயிற்சி செய்துவிட்டு ஒரு நாள் செய்யாமல் இருந்தால் வலி இரண்டு மடங்காக அதிகரிக்கலாம். ஒரே நேரத்தில் அதிகப்படியான எடையைத் தூக்குவதால், தசைகள் சோர்வடைந்து, அடிக்கடி கைகள் மற்றும் கால்கள் நடுங்க ஆரம்பிக்கும். உடற்பயிற்சியின்போது வியர்வை அதிகமாக வெளியேறும். வியர்வையோடு, உடலில் உள்ள சோடியம் உள்ளிட்ட தாது உப்புக்களும், நீர்ச்சத்தும் வெளியேறிவிடுகின்றன. அதுவே நம் உடலின் எலக்ட்ரோலைட் குறையக் காரணமாகிவிடுகிறது. சிலர், அந்தச் சமயத்தில்தான் இன்னும் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வார்கள்.
அதிக உடற்பயிற்சியால், கடுமையான தலைவலி, தசைகளில் பிடிப்பு, சுளுக்குப் போன்றவை ஏற்படலாம். இத்தகைய பிரச்னை, தசைகள் அளவுக்கு அதிகமாக ஸ்ட்ரெட்ச் ஆவதுடன், அதிகப்படியான எடையைத் தாங்குவதாலும் ஏற்படுகிறது. அதிக எடையைத் தூக்கினால் முக்கியமாகப் பாதிக்கப்படுவது முதுகுதான். அதிலும் வயது ஏற ஏற முதுகு வலியும் அதிகரிக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்து சாதாரணச் சளி, காய்ச்சல் போன்றவை எளிதில் ஏற்படக்கூடும்.
எனவே, கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்பு நன்றாக யோசிக்க வேண்டும். இவற்றைத் தவிர்க்க, பயிற்சியாளர்களின் அறிவுரைப்படி பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். 220-ல் இருந்து நம்முடைய வயதில் கழித்தால் வரக்கூடிய எண் தான் நம் வயதுக்கு ஏற்ற அதிகபட்சமான இதயத்துடிப்பு. உடற்பயிற்சி செய்யும்போது, இது சராசரி அளவில் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். அப்போதுதான் உடல் நிலை சீராக இருக்கும்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், ஒரு நல்ல ஜிம்மில் சேர்ந்து மருத்துவ அல்லது உடற்பயிற்சி ஆலோசகரின் வழிகாட்டுதலுடன் கார்டியோ பயிற்சிகளைச் செய்ய வேண்டும். கூடவே சரியான உணவுக்கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தாலே போதும். உடலும் ஃபிட்டாக இருக்கும். எப்போதுமே ஹெல்தியாக இருக்கலாம்!”