கஞ்சித்தொட்டி போல பணத்தொட்டி. ஏழைகளுக்கு செல்லுமா கருப்புப்பணம்?
தமிழகத்தில் ஒரு காலத்தில் பஞ்சம் வந்த போது ஊர் ஊருக்கு கஞ்சித்தொட்டி திறக்கப்பட்டது. அதைபோல தற்போது கருப்புப்பணத்தை கிழிக்காமல், எரிக்காமல் பணத்தொட்டியில் போட இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரஹீம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு வெளிவந்ததில் இருந்து கருப்புப்பணம் வைத்திருக்கும் பலர் தீயில் எரித்தும், குப்பையிலும் போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரஹீம் ஒரு ஐடியாவை அறிவித்துள்ளார். அதாவது வீணாகும் கருப்பு பணத்தை ஏழைகளுக்கு கொடுங்கள் எனவும் அப்படி கொடுக்க பயமாக இருந்தால் நாங்கள் பணத்தொட்டி திறக்கிறோம் அதில் போடுங்கள் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அந்தக்கட்சியின் தலைவர் தடா ஜெ. அப்துல் ரஹிம் கூறியபோது, “2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்தால் வரி விதிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதனால் நிச்சயம் வரி செலுத்தாமல் பதுக்கி வைத்துள்ள பணத்தை, வெளியில் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும். மேலும் அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் கறுப்புப் பணத்தை மாற்றவும் இயலாது.
இதனால் அந்தப்பணத்தை ஏழைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் அவர்களது வாழ்க்கை முன்னேறும். ஏழைகளுக்கு பணம் கொடுக்க தயங்கும் மற்றும் பயப்படுபவர்கள் எங்கள் கட்சி தலைமை அலுவலகத்தை நாடலாம். எங்களிடமும் தகவல் சொல்லத் தயங்கினால் அலுவலக வாசலில் பணத்தொட்டி திறக்கப்பட்டுள்ளது. அதில் உங்களது பணத்தை யாருக்கும் தெரியாமல் போட்டுவிட்டுச் செல்லலாம்.
எங்களிடம் தகவல் தெரிவித்தாலும் அது ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும். இந்த பணத்தொட்டி என்பது அட்டைப் பெட்டியால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் கோடிக்கணக்கான ரூபாய்களை போடலாம். இந்த பணத்தொட்டி 339, காயிதே மில்லத் ரோடு, ஆதம் மார்க்கெட் வளாகம், திருவல்லிக்கேணி என்ற முகவரியில் உள்ளது