இப்போதெல்லாம் இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்களில் பெரும்பாலானவர்கள், முகத்தில் துப்பட்டாவைச் சுற்றி, முகமூடி அணிந்தவர்களாகவே செல்வதைப் பார்க்க முடிகிறது. ‘தூசு, வெயில் போன்றவற்றிலிருந்து தப்பிக்கத்தான்’ என்றபடி இவர்கள் வேகமெடுத்துக் கொண்டிருக்க… ”இது தவறான பழக்கம்” என்று எச்சரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த தோல் நோய்கள் சிறப்பு மருத்துவர் மாயா!
”முகம் முழுக்க துப்பாட்டாவைச் சுற்றி, கண்கள் மட்டும் தெரியுமாறு கட்டிக்கொள்கிறார்கள். சிலர் மிக இறுக்கமாக இரண்டு, மூன்று சுற்றுகள் வரைகூட சுற்றிக்கொள்கிறார்கள். இதனால், முகத்துக்கு பல பிரச்னைகள் வந்து சேரும் என்பதே உண்மை.
பெரும்பாலான பெண்கள் கறுப்பு நிறம் உள்ளிட்ட அடர்ந்த நிறத் துணிகளை முகமூடிக்குப் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய நிறத் துணிகள், வெகுவாக சூரிய ஒளியை ஈர்த்து தோலுக்கு பாதிப்பைத் தரும். தடிமனான துணிகளைக் கட்டும்போது, காற்று உட்செல்ல வாய்ப்பில்லாமல், தோலில் இருக்கும் துளைகள் வாயிலாக நடக்கும் சுவாசம் தடைபடும்; கஞ்சி போட்ட மொடமொடப்பான துணிகளைப் பயன்படுத்தும்போது, சுவாச அலர்ஜி ஏற்படும்; சில வண்ணத் துணிகளைக் கட்டும்போது, வியர்வை காரணமாக அந்தத் துணியிலிருக்கும் சாயம், தோலில் இருக்கும் துளைகள் வாயிலாக உள்ளுக்குள் ஊடுருவி பிரச்னைகளை ஏற்படுத்தும்; இறுக்கமாக கட்டுவதால் முகப்பரு, வியர்க்குரு என பலவித தோல் பிரச்னைகளும் வரக்கூடும்; இறுக்கமாக கட்டியிருப்பதால், முக அசைவுகள் குறையும். இதனால், எதிரில், பக்கத்தில் வரும் வாகனங்களைப் பார்த்து சமாளித்து ஓட்டவும், ஓட்டும் வாகனத்தை கன்ட்ரோல் செய்யவும் முடியால் போக நேரிடலாம்” என்றெல்லாம் சொன்ன டாக்டர்,
”அழகு பராமரிப்பைவிட, உயிர் பாதுகாப்புதான் முக்கியமானது. எனவே, டூ வீலரில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் பயன்படுத்துங்கள். தலை வியர்த்து, அழுக்கு, பிசுபிசுப்பு என்று தலைமுடி பாழாகிவிடும் என்று இதைத் தவிர்ப்பவர்கள், தரமான ஹெல்மெட் பயன்படுத்துங்கள். கூடவே, மெல்லிய காட்டன் துணியைத் தலையில் போட்டு, அதன் மீது ஹெல்மெட்டை அணிந்தால்… உஷ்ணம், வியர்வையை அந்தத் துணி உறிஞ்சிக் கொள்ளும். பாதுகாப்பு என்று நினைத்து பிரச்னைகளை வர வழைத்துக் கொள்ளாதீர்கள்… துப்பட்டா முகமூடி அணியாதீர்கள்!” என்று அறிவுறுத்தினார் டாக்டர் மாயா.