தேசத்தந்தையை சுட்டுக்கொன்றவருக்கு சிலையா? டாக்டர் ராமதாஸ் ஆவேசம்

godse statueramdossதேசத்தந்தை மகாத்மா காந்தியைப்  படுகொலை செய்த நாதுராம் கோட்சேவிற்கு  சிலை அமைக்கும் முடிவு என்பது தேச விரோததற்கு சமமானது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்ட்டுள்ள  அறிக்கை ஒன்றில்,”தேசத் தந்தை மகாத்மா காந்தியை உலகமே போற்றிக் கொண்டிருக்கும் நிலையில், அவரது புகழைக் குலைக்கும் வகையிலும் இந்துத்துவத்தின் அடையாளத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையிலும் காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவின் சிலையை நாடு முழுவதும் அமைக்க அகில பாரதிய இந்து மகாசபை தீர்மானித்திருக்கிறது.

சங்க பரிவாரங்களின் ஆதரவு அமைப்புகளில் ஒன்றான அகில பாரதிய இந்து மகாசபையின் இந்த தேசவிரோத திட்டம் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் வேகம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதற்கு மாறாக ஆட்சியாளர்களின் மறைமுக ஆதரவுடன் இந்துத்துவ அமைப்புகள் தங்களின் நீண்ட நாள் இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ளும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கட்டாய மத மாற்றத்தைத் தீவிரமாகத் தொடங்கியுள்ள இந்து அமைப்புகள், அடுத்தகட்டமாக  நாதுராம் கோட்சேவுக்கு தேசபக்தர் என்ற முலாம் பூசும் பணிகளைத் தொடங்கியுள்ளன. இதன் ஒருகட்டமாக மக்களவையில் பேசிய பா.ஜ.க. உறுப்பினர் சாக்ஷி மகராஜ், கோட்சேவை தேச பக்தர்; தேசியவாதி என்று புகழ்ந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து தமது கருத்தை அவர் திரும்பப்பெற்றுக் கொண்ட நிலையில், அவருக்கு சிலை அமைக்கும் இயக்கத்தை இந்து மகாசபைத்  தொடங்கி உள்ளது. உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் கோட்சேவுக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் எந்த மூலையில் கோட்சேவுக்கு சிலை அமைக்கப்பட்டாலும் அது கண்டிக்கத்தக்கதுதான் என்ற போதிலும், இதை ஏதோ வட இந்தியாவில் மட்டும் நடக்கும் நிகழ்வாக கருதி ஒதுங்கியிருக்க முடியாது. ஏனெனில், அகில பாரதிய இந்து மகாசபையின் பொதுக்குழு கூட்டம் நேற்று திண்டுக்கல் நகரில் நடத்தப்பட்டு, அதில், தமிழகத்தின் 32 மாவட்டத் தலைநகரங்களிலும் கோட்சேவின் மார்பளவுச் சிலைகளை அமைப்பதற்கு உறுதியேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அகில பாரதிய இந்து மகாசபையின்  தேசியத் தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக், துணைத் தலைவர் ராஜிவ் ரஞ்சன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் கோட்சேவின் சிலைகளை அமைப்பதற்கு மாநில அரசே இடம் ஒதுக்க வேண்டும் என்றும், அவ்வாறு இடம் ஒதுக்காத பட்சத்தில் தங்களுக்கு சொந்தமான அலுவலக வளாகத்திலேயே சிலைகள் அமைக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அகில பாரதிய இந்து மகாசபையின் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானதாகும். தேசத்தந்தை மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு சிலை அமைக்க துடிப்பதன் மூலம் இந்த சமுதாயத்திற்கு இந்துத்துவா அமைப்புகள் என்ன செய்தியை சொல்ல விரும்புகின்றன என்பது தெரியவில்லை.

தலைவர்களுக்கு சிலைகள் அமைப்பதை வெறும் சடங்காக கருதிவிட முடியாது. வருங்கால தலைமுறைக்கு பல முக்கிய பாடங்களை சொல்லவே சிலைகள் அமைக்கப்படுகின்றன.  நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டதற்காக காந்திக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தை இயற்றியதற்காக அம்பேத்கருக்கும், சுயமரியாதை மற்றும் பகுத்தறிவை வலியுறுத்தியதற்காக தந்தை பெரியாருக்கும், விடுதலை உணர்வை ஊட்டியதற்காக மகாகவி பாரதியாருக்கும், அனைவரும் கல்வி பெற வேண்டும் என்ற உன்னத நோக்குடன் ஆட்சி செய்ததற்காக காமராசருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவர்களின் வரலாற்றைப் படிக்கும் இளைய தலைமுறையினருக்கு இவர்களைப் போல, உருவெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதே, இவர்களின் சிலைகள் அமைக்கப்பட்டதன் நோக்கமாகும். அவ்வாறு இருக்கும் போது, கோட்சேவின் சிலைகளை அமைப்பதன் மூலம் எதிர்கால தலைமுறை எப்படிப்பட்டதாக உருவெடுக்க வேண்டும் என இந்துத்துவா அமைப்புகள் விரும்புகின்றன?

இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டதால்தான் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றேன் என்று வாக்குமூலம் அளித்த ஒருவரின் சிலைகளை அமைப்போம் என்று பேசுவதே தேசவிரோத, தேச துரோக செயல் ஆகும். கோட்சேவின் சிலைகள் அமைக்கப்பட்டால் அதை விட பெரிய தேசிய அவமானம் எதுவும் இல்லை.

கோட்சேவுக்கு சிலை அமைப்பது இந்தியாவின் மதநல்லிணக்கத்துக்கு ஊறு விளைவித்து விடும். எனவே, காந்தியை படுகொலை செய்த கோட்சேவுக்கு சிலை அமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்” என்று  அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply