ஊழல் வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்த ஒருவரை புகழும் வகையில் தமிழக ஆளுனரின் கவர்னர் உரை அமைந்துள்ளதாகவும், சட்டமன்றம் அதிமுக கட்சியின் பொதுக்குழு போல மாறிவிட்டது என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரை அ.தி.மு.க.வின் புகழ்பாடும் நிகழ்வாக நடைபெற்று முடிந்துள்ளது. ஆளுனர் உரையின் நோக்கமே வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்த முன்னோட்டம் தருவதுதான் என்ற வழமையை மாற்றிய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.
ஆளுனரின் உரையில் தமிழகம் எதிர்கொண்டிருக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. தமிழகத்தில் விலைவாசியும், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதை சரி செய்வதற்கான திட்டங்கள் எதுவும் ஆளுனர் உரையில் இல்லை. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதைத் தடுக்க எந்த நடவடிக்கையையும் எடுக்காத நிலையில், நதிநீர் பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டும் வகையில் ஆளுனர் உரையை தமிழக அரசு வடிவமைத்திருக்கிறது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, முதல்வர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவை பாராட்டும் வகையில் ஆளுனர் உரை அமைந்ததன் மூலம் சட்டப்பேரவையின் மாண்பு அதலபாதாளத்தில் தள்ளப்பட்டுவிட்டது.
மக்களவைத் தேர்தலிலும், திருவரங்கம் சட்டப்பேரவை இடைத் தேர்தலிலும் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு, முறைகேடு மற்றும் பணத்தைக் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கியதன் மூலம் தான் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. மோசடியின் மூலம் அ.தி.மு.க. பெற்ற வெற்றியை, தமிழக அரசின் வெற்றியைப் போன்று ஆளுனர் உரையில் சித்தரித்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. மொத்தத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டத்தைப் போலவும், தமிழக ஆளுனர் ரோசய்யாவை அ.தி.மு.க. நிர்வாகி போலவும் தமிழக ஆட்சியாளர்கள் மாற்றிவிட்டனர்.
அ.தி.மு.க. மற்றும் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் புகழ் பாடியதைத் தவிர ஆளுனர் உரையில் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. ஆனால், இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக மறைக்கும் வகையில் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதாக பாராட்டுத் தெரிவிக்கப்பட்டிருப்பது முரண்பாடுகளின் உச்சம் ஆகும்.
இந்த ஆளுனர் உரை பழைய திட்டங்களின் தொகுப்பாக அமைந்திருக்கிறது. நிதியமைச்சர் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையாக இருந்தாலும், அமைச்சர்கள் தாக்கல் செய்யும் மானியக் கோரிக்கைகளாக இருந்தாலும் அதில் எந்த திட்டங்களும் இடம் பெறக்கூடாது;
அனைத்துத் திட்டங்களும் அவை விதி எண் 110&ன் கீழ் ஜெயலலிதா படிக்கும் அறிக்கையில் தான் இடம் பெற வேண்டும் என்பது கடந்த 4 ஆண்டுகளாக எழுதப்படாத விதியாக மாறிவிட்ட நிலையில், ஆளுனர் உரையில் புதிய திட்டங்கள் இடம் பெற்றிருக்கும் என்று எதிர்பார்ப்பதே தவறு தான். மொத்தத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று ஆளுனர் உரை என்ற சடங்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதைத் தவிர இதில் சொல்வதற்கு எதுவுமில்லை” என்று கூறியுள்ளார்.