ஜெயலலிதாவுக்கு கிடைக்கும் கடைசி பாராட்டு உரை. ஆளுனர் உரை குறித்து ராமதாஸ்

ஜெயலலிதாவுக்கு கிடைக்கும் கடைசி பாராட்டு உரை. ஆளுனர் உரை குறித்து ராமதாஸ்
ramdoss
நேற்று கூடிய தமிழக சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றினார். இந்த உரையின்போது பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெளிநடப்பு செய்துவிட்டன. இந்நிலையில் இந்த ஆளுனர் உரைய்தான் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் கடைசி உரை என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பெரும் மாற்றம் ஏற்படும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியுள்ளது. தமிழக அரசால் தயாரித்து தரப்படும் உரையை ஆளுநர் படிப்பது தான் வழக்கம். ஆனால், இம்முறை கடந்த காலங்களில் ஜெயலலிதா பேசிய விஷயங்களை ஆளுநர் அப்படியே படித்திருக்கிறார். தமிழகத்தில் ஆளுநர் பதவி ரப்பர் ஸ்டாம்பாக மாறிவிட்டதற்கு இது உதாரணம்.

அதிமுக ஆட்சியில் அனைத்து அறிவிப்புகளும் அம்மா மூலமாக மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்பதால் ஆளுநர் உரை என்பது கடந்த காலங்களில் ஒரு சம்பிரதாய நிகழ்வாகவே இருந்திருக்கிறது. அதிமுக அரசின் பதவிக்காலம் இன்னும் 3 மாதங்களில் முடிவுக்கு வரவிருப்பதால் புதிய திட்டங்கள் மற்றும் கொள்கை அறிவிப்புகளை இப்போது வெளியிட முடியாது. அரசுக்கு முழு அதிகாரம் உள்ள காலத்திலேயே எதுவும் இருக்காத ஆளுநர் உரையில், அதிகாரம் முடியப்போகும் காலத்தில் பெரிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால் தானோ என்னவோ, ஆளுநர் உரை முழுவதும் ஜெயலலிதா மற்றும் அவரது அரசின் புகழ்பாடுவதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு கையாண்ட விதத்தை உலகமே கடுமையாக விமர்சித்தது. ஆனால், இதுவரை இல்லாத வகையில் வெள்ள பாதிப்பை ஜெயலலிதா அரசு சிறப்பாக கையாண்டதாக ஆளுநர் ரோசய்யா பாராட்டியிருக்கிறார்.

விவசாயிகளின் பிரச்சினை, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், கச்சத்தீவை மீட்டல், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுதல் உட்பட தமிழகம் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தனவோ, அதேநிலையில் தான் இப்போதும் தொடர்கின்றன. 5 ஆண்டுகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால், அவற்றையெல்லாம் தீர்க்க ஜெயலலிதா அரசு நடவடிக்கை எடுத்தது போலவும், 99% தீர்ந்துவிட்ட அந்த பிரச்சினைகள் சில நாட்களில் தீர்ந்து விடும் என்பது போலவும் தோற்றத்தை ஏற்படுத்த ஆளுநர் உரையை தமிழகஅரசு பயன்படுத்தி கொண்டிருக்கிறது. ஆளுநரும் தெரிந்தோ, தெரியாமலோ இதற்கு துணை போயிருக்கிறார்.

தமிழகத்தில் வறுமையை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 92% மக்கள் இன்னும் இலவசங்களை நம்பிருக்க வேண்டிய நிலை தான் நிலவுகிறது. விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. மழை வெள்ளத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்டு இரு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அவர்களுக்கு இன்னும் நிவாரண நிதி வழங்கப்படவில்லை.

சென்னையில் 14 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் நிவாரண நிதி வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ளவர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்பது இன்னும் தெரியவில்லை. மழையில் சேதமடைந்த சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட 183 அறிவிப்புகளில் 10% கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆனால், எதுவுமே செய்யாத அரசுக்கு பாராட்டுக்கு மட்டும் குறைவில்லை.

கடந்த காலங்களில் ஜெயலலிதா சட்டப்பேரவையில் ஆற்றிய உரைகள், வெளியிட்ட அறிக்கைகள் ஆகியவற்றின் தொகுப்பை தான் ஆளுநர் ரோசய்யா அவரது உரையாக வாசித்திருக்கிறார். முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி பாராட்டு விழாக்களை நடத்தியும், சட்டப்பேரவையில் அமைச்சர்களை பாராட்டி பேச வைத்தும் மகிழ்வது வழக்கம். அந்த மகிழ்ச்சியை இப்போது ஆளுநரை உரையாற்ற வைத்து ஜெயலலிதா அனுபவித்துள்ளார். இதுதான் அவருக்கான கடைசி பாராட்டு உரையாக இருக்கப்போகிறது”

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply