தினமும் கிரீன் டீ குடித்தால் உடல் எடை குறையுமா?

556aa9fa-af37-4a67-9778-ac399e3c14f5_S_secvpf

சில ஆராய்ச்சிகள் கிரீன் டீ உடல் எடையைக் குறைக்கும் என்று சொன்னதும், உடல் எடையைக் குறைக்க முயற்சிப்போர் பலரும் இதனை தினமும் குடித்து வருகிறார்கள். காபி, பால் டீயை விட கிரீன் டீ ஆரோக்கியமானது என்பதில்லை எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. ஆனால் இது உண்மையிலேயே உடல் எடையைக் குறைக்க உதவுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். உங்களின் இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யவே இந்த கட்டுரை.

கிரீன் டீயில் வைட்டமின்களான ஏ, பி, பி5, டி, ஈ, சி, கே, எச் மற்றும் செலினியம், குரோமியம், ஜிங்க், காப்ஃபைன், மாங்கனீசு போன்றவை வளமாக நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, கிரீன் டியில் EGCG என்னும் சேர்மமும் உள்ளது. உடல் சாதாரணமாகவே வெப்பத்தை உருவாக்கும். இந்த வெப்பம் தான் கலோரிகளை எரிக்க உதவுகிறது. ஆனால் கிரீன் டீ குடிக்கும் போது, உடலின் வெப்பமானது அதிகரிக்கப்படுகிறது. கிரீன் டீயினால் உடலின் வெப்பம் அதிகரிப்பதற்கு காரணம், அதில் உள்ள EGCG தான். இப்படி வெப்பம் அதிகமாவதால், கலோரிகளின் அளவு அதிகமாக எரிக்கப்படுகிறது.

கலோரிகள் அதிகம் எரிக்கப்படுவதால், உடல் எடை வேகமாக குறைகிறது. கிரீன் டீயின் ஒரு கப்பில் 30 மி.கி காப்ஃபைன் உள்ளது. காப்ஃபைன் உடலின் ஆற்றலை தூண்டி, உடற்பயிற்சியில் நீண்ட நேரம் சிறப்பாக ஈடுபட உதவி, அதன் காரணமாக மறைமுகமாக உடல் எடையைக் குறைக்கிறது. ஆய்வு ஒன்றில், கிரீன் டீ குடிக்காமல், வெறும் உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்தவர்களை விட, தொடர்ந்து கிரீன் டீ குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தவர்களின் உடலில் 15% அதிகமாக கொழுப்புக்கள் கரைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

மேலும் கிரீன் டீ குடிக்காமல் உடற்பயிற்சி செய்து வந்தவர்களின் உடலில் 3% கொழுப்புக்கள் தான் கரைக்கப்பட்டிருந்ததாம். கிரீன் டீயை ஒரு நாளில் 2-3 கப்பிற்கு மேல் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் இதய துடிப்பை அதிகரித்து, தூக்கமின்மை, குமட்டல், வாந்தி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, களைப்பு, மன இறுக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.

கிரீன் டீயை குடிக்க ஆரம்பிக்கும் முன், மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது. அதிலும் உங்களுக்கு இதயம் பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இரத்த சோகை, ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை இருந்தால், கிரீன் டீ குடிப்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இப்பிரச்சனைகளுக்கான மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது, கிரீன் டீ குடித்தால், அவை இடைவினைபுரியும்.

Leave a Reply