`தேவைக்கு அதிகமா தண்ணி குடிக்காதீங்க!’

p55

காலையில் எழுந்ததும் தண்ணி குடிக்கிறேன், சரியா?’, ‘தண்ணி நிறைய குடிச்சா ரொம்ப நல்லதா?’, ‘சாப்பிடும்போது தண்ணி குடிக்கக் கூடாதா?’, ‘வெதுவெதுப்பான தண்ணீரா, வெந்நீரா… எது நல்லது..?’

இப்படி தண்ணீர் குடிப்பது பற்றி ஏகப்பட்ட குழப்பங்கள் பலருக்கும். இவர்களுக்கெல்லாம் சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர், ரேச்சல் ரெபேக்கா தரும் சூப்பர் டிப்ஸ்…

பொதுவாக, நம் உடலுக்குத் தண்ணீர் தேவையெனில், தாகம் எடுத்து நம்மிடம் கேட்கும். அப்போது குடித்தால் போதுமானது. லிட்டர் லிட்டராக குடிக்கத் தேவையில்லை.

‘எனக்குத் தாகமே எடுக்கிறதில்லையே’ என்பவர்களுக்கு, கபம் அதிகமாகிறது என்று அர்த்தம். அதேபோல, அதிக தாகம் எடுப்பவர்களுக்கு பித்தம் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தாகம் எடுக்கவில்லை, தாகமாகவே இருக்கிறது என்றால் பரவாயில்லை. அதுவே நிரந்தரம் என்றால், மருத்துவ ஆலோசனை அவசியம்.

உடல் தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடித்தால், செரிமானப் பிரச்னை நிச்சயம் வரும். காரணம், வயிற்றில் செரிமானம் நடப்பது அக்னியால். அதிகமான தண்ணீர் அந்த அக்னியை அணைக்கும்போது, அது தடைப்படும்.

தாகம் எடுத்தும் தண்ணீர் அருந்தாமல் தவிர்க்கிறவர்களுக்கு, நீர்ச்சத்துக் குறைந்து, சரும வறட்சி, சுருக்கம், முடி உதிர்வு, கருவளையம், காலில் வெடிப்பு போன்றவை ஏற்படும்.

சாப்பிடும் முன், பின், சாப்பிடும்போது என்று எப்போது தாகம் எடுக்கிறதோ அப்போது தண்ணீர் குடிக்கலாம்.

காலையில் எழுந்ததும் ஒரு குவளை தண்ணீர் குடித்த பின்னரே காலைக் கடமைகளை முடிக்கப் பழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்கு, அவர்களின் உடலில் கழிவை வெளியேற்றும் வாயு உற்பத்தி நின்றுவிட்டது என்று அர்த்தம். தானாக நடக்க வேண்டிய விஷயத்தை தண்ணீர் குடித்துதான் தூண்ட வேண்டும் என்றால், உடலில் பிரச்னை என்றே அர்த்தம்.

பொதுவாக, வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது, ஜீரணக் கோளாறுகளைத் தவிர்க்கும். குறிப்பாக, காலை எழுந்ததும்! அதற்காக, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர்தான் குடிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. உணவைத் தவிர்த்து, ஒரு பழம் சாப்பிடலாம்.  

தண்ணீரைக் குழந்தைகளுக்கு சில்வர் பாத்திரத்தில் வைத்தும், உடல் உழைப்பாளிகளுக்கு இரும்புப் பாத்திரத்தில் வைத்தும் கொடுக்கலாம். வெயில் காலத்தில் கண்டிப்பாக மண்பானைதான் பயன்படுத்த வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள், காப்பர் பாத்திரத்தில் வைத்த நீரை குடிக்க வேண்டாம்.  

நிலத்தடி நீரை நன்றாகக் கொதிக்க வைத்து, வெதுவெதுப்பான நிலையில் குடிப்பது சிறந்தது. தண்ணீரை லேசாக சூடுபண்ணுவதும், வெந்நீரில் பச்சைத் தண்ணீர் கலந்து வெதுவெதுப்பாகக் குடிப்பதும் தவறு. கிருமிகள் அழியாது.

Leave a Reply