அட்டாக் பாண்டி கைதுக்கும் விஷ்ணுப்ரியா தற்கொலைக்கும் என்ன சம்பந்தம்?
பொதுவாக எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், ஆட்சிக்கு ஏதாவது ஒரு பிரச்சனையில் நெருக்கடி ஏற்பட்டால், அந்த பிரச்சனையை மக்களிடம் இருந்து திசை திருப்ப ஏதாவது ஒரு அதிரடி நடவடிக்கையை எடுப்பது வழக்கம். அதுபோலவே பெண் டி.எஸ்.பி விஷ்ணுப்ரியா தற்கொலை விவகாரம் தற்போது மாநிலம் முழுவதும் சூடுபிடித்து கொண்டிருக்கின்றது. போதாத குறைக்கு திமுக தலைவர் கருணாநிதியும், பாமக நிறுவனர் ராமதாஸும் இதுதான் சமயம் என அரசின் மீது கடும் குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பிரச்சனையில் இருந்து மக்களை திசைதிருப்பவே அதிரடியாக அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டதாகவும், ஆளுங்கட்சி எதிர்பார்த்ததுபோலவே ஊடகங்களும், பத்திரிகைகளும் விஷ்ணுப்ரியா தற்கொலை செய்தியை பின்னுக்கு தள்ளிவிட்டு அட்டாக் பாண்டி கைதுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
உண்மையில் அட்டாக் பாண்டியை வரும் சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கைது செய்து தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என ஆளுங்கட்சி திட்டம் போட்டிருந்ததாகவும், ஆனால் அந்த துருப்புச்சீட்டை முன்கூட்டியே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறுகின்றனர். அதே நேரத்தில் விஷ்ணு பிரியா தற்கொலைக்கு காரணமாகக் கூறப்படும் யுவராஜும் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.