திருமணமான 15 நிமிடத்தில் விவாகரத்து: துபாயில் வினோதம்
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்ற தமிழ் கலாச்சாரம் கூறி வரும் நிலையில் வெளிநாட்டில் திருமணம் என்பது பல சமயங்களில் ஒரு பொழுதுபோக்காக பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் துபாயில் நடந்த ஒரு திருமணம் வெறும் பதினைந்து நிமிடங்களில் முடிவுக்கு வந்துள்ளது.
துபாயில் உள்ள மணமகன் ஒருவர் 20,000 பவுண்ட்ஸ் கொடுத்து திருமணம் செய்துகொள்வதாக மணமகளின் தந்தையாரிடம் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
இதற்கு மணமகளின் தந்தை சம்மதம் தெரிவித்ததையடுத்து, அனைவர் முன்னிலையிலும் இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடனேயே பணத்தை தருமாறு மணமகளின் தந்தை கேட்டபோது மணமகன் பேசிய தொகையை கொடுக்காமல் பாதி மட்டுமே கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மணமகளின் தந்தை பொறுமையிழந்து அனைவர் முன்னிலையிலும் சண்டைபோட்டுள்ளார். இந்த சம்பவத்தால் தனக்கு அவமானம் நேர்ந்துவிட்டதாக கூறி, மணமகன் திருமணமான 15 நிமிடத்திலேயே தலாக் சொல்லி மணமகளை விவாகரத்து செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.