ரூ.6,655 கோடி செலவில் உலகின் மிக உயரமான கட்டிடம். 2020க்குள் துபாயில் கட்ட திட்டம்
உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை துபாயில் உள்ள பூர்ஜ் கலிபா கட்டிடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த பெருமையை இந்த கட்டிடம் இன்னும் சில ஆண்டுகளில் இழக்கவிருக்கின்றது. ஆம் இதைவிட உயரமான கட்டிடம் ஒன்று துபாயில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த கட்டிடம் 2020ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
துபாயில் உள்ள பூர்ஜ் கலிபா கட்டிடம் 800 மீட்டர் உயரம் கொண்டது. 160 மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க ரூ.9 ஆயிரம் கோடி செலவானது. கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரியில் கட்டி முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் பொது மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. இந்த நிலையில், துபாயில் பூர்ஜ் கலிபா உள்ளிட்ட பல்வேறு உயரமான கட்டடங்களை உருவாக்கிய எமர் கட்டிட நிறுவனம் புதிதாக இதைவிட பெரிய கட்டிடம் ஒன்றினை கட்ட திட்டமிட்டுள்ளது.
6 ஆயிரத்து 655 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் அந்த கட்டிடம் ஏற்கனவே உள்ள பூர்ஜ் கலிபாவை விட உயரமாக கட்டப்பட உள்ளதாக அந்த நிறுவனத்தின் சேர்மன் முகமது அலப்பர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.