மோசடி நிதி நிறுவனங்களை மொபைல் போன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

8aaநிதி நிறுவனங்கள் செய்யும் மோசடி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஒரு மோசடி நிறுவனத்தைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்குள், அடுத்த மோசடி நிறுவனம் இன்னொரு பெயரில் தனது லீலைகளை நடத்தத் தொடங்கிவிடுகிறது. இந்த மோசடி நிறுவனங்களுக்கு செக் வைக்கிற மாதிரி தமிழ்நாடு பொருளாதாரக் குற்றப்பிரிவு, தொலைபேசி சேவை ஒன்றைத் தொடங்கி உள்ளது. இதன் மூலம் மோசடி நிறுவனங்கள் பற்றிய தகவல்களைப் பொதுமக்கள் ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டு உஷாராகலாம்.

ஒரு நிறுவனம் மக்களிடமிருந்து பணத்தை வசூலிக்க வேண்டும் எனில், முதலில் மத்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி வாங்க வேண்டும். ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாத எந்த நிறுவனமும் மக்களிடம் பணத்தை வசூல் செய்வது தவறு. ஆனால், ஆர்பிஐ-யிடம் எந்தவிதமான அனுமதியும் பெறாமல், இன்றைக்குப் பல நிறுவனங்கள் மக்களிடமிருந்து பணத்தை வசூலித்து திரும்பத் தராமலே ஏமாற்றி வருகின்றன. ஏமாந்த மக்களும் பணத்தை இழந்தபிறகுதான் காவல் நிலையத்துக்கு வந்து புகார் தருகின்றனர்.

பொதுமக்கள் இந்த மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு முக்கியக் காரணம் கற்பனையில்கூட நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிப்பதும், யாரும் தரமுடியாத வட்டி விகிதங்களைத் தருவதாகச் சொல்வதும்தான். இதனால் கவர்ந் திழுக்கப்படும் மக்கள், இந்த நிறுவனங் களில் பணத்தை முதலீடு செய்து நஷ்டமடைகிறார்கள். ஈமு கோழி, கரன்சி டிரேடிங் என இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

இதுமாதிரியான மோசடி நிறுவனங் களில் மக்கள் முதலீடு செய்யாமல் தடுக்கவே பொருளாதாரக் குற்றப்பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான், இப்போது அறிமுகமாகி இருக்கும் தொலைபேசி சேவை. இதுகுறித்துப் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏடிஜிபி பிரதீப் வி.பிலிப் விளக்கமாக எடுத்து சொன்னார்.

”மோசடி நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தடுக்கும்விதமாகத் தமிழ்நாடு பொருளாதாரக் குற்றப்பிரிவு தொலைபேசி உதவி சேவை மையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக 24 மணிநேரமும் செயல்படும் வகையில் 044-64500155 என்ற எண்ணை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இந்த எண்ணை தொடர்புகொண்டால், நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் நிதி நிறுவனம் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

இந்த எண்ணை தொடர்புகொண்டு, நீங்கள் முதலீடு செய்த அல்லது செய்ய விரும்பும் நிறுவனத்தின் அடிப்படை தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். அதாவது, இந்த எண்ணுடன் தொடர்புகொண்டால், நீங்கள் புகார் தெரிவிக்க வேண்டுமா அல்லது தகவலை பதிவு செய்ய வேண்டுமா எனக் கேட்கும். இதில் உங்கள் விருப்பத்தைக் குரல் பதிவு மூலமாகப் பதிவு செய்தபிறகு, உங்கள் பெயர், தொலைபேசி எண், முதலீடு செய்த நிறுவனத்தின் முழுப் பெயர், முதலீடு செய்த தொகை, எப்போது முதலீடு செய்தீர்கள் என்பதுபோன்ற விவரங்களைக் கேள்விகளாக கேட் பார்கள். ஏற்கெனவே ரெக்கார்டு செய்யப்பட்ட இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதிலை தருவது அவசியம்.

இந்த விவரங்கள் பெறப்பட்ட அடுத்த 24 மணி நேரத்தில், அந்த நிறுவனம் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமா, இல்லையா என்பதைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு துறை உங்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும். மேலும், அந்த நிறுவனத்தின் மேல் ஏற்கெனவே புகார் உள்ளதா, இல்லையா என்பதையும் தெரிவிக்கும். அதன்பின் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதா, வேண்டாமா என்பதை நீங்கள் முடிவு செய்துகொள்ளலாம்.

இந்த உதவி மையம் இப்போது ஆரம்ப நிலையிலேயே உள்ளது. இதில் சில அடிப்படை தகவல்களை மட்டும்தான் பொதுமக்களுக்குத் தருகிறோம். இன்னும் சில மாதங்களில் இதை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்வோம். இந்தத் தொலைபேசி அழைப்பில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் குறித்த தகவல்களை விசாரித்து நடவடிக்கை எடுப்போம்.

இன்றைய சூழ்நிலையில் பொதுமக்களும், குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பதிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இதன்விளைவாக அதிக வட்டி தரும் நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறுகிறார்கள். மக்களும் உஷாராக இருந்தால் மட்டுமே இந்த நிறுவனங்களிடமிருந்து தப்பிக்க முடியும்” என்றார் பிரதீப் வி.பிலிப்.

இந்தத் தொலைபேசி எண்ணுடன் நாம் தொடர்புகொண்டபோது சில சிக்கல்களைச் சந்திக்கவேண்டி யிருந்தது. இதுபற்றிப் பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, சில பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் இந்தச் சிக்கல் ஏற்படுகிறது. கூடிய விரைவில் இந்தச் சிக்கல்களெல்லாம் சரியாகிவிடும் என்றார்கள்.
இந்தத் தொலைபேசி சேவையைப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் இனியாவது ஏமாற்று நிறுவனங்களிடம் மக்கள் சிக்கி பணத்தை இழக்காமல் இருந்தால் சரி!

பொதுமக்களிடம் இருந்து பணத்தை திரட்ட எந்தெந்த நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய ரிசர்வ் வங்கி தனது வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது. அந்த வெப்சைட்டின் பெயர் http://www.rbi.org.in/commonman/English/scripts/nbfcs.aspx#NIII

Leave a Reply