தீபா வீட்டிற்கு ரெய்டு நடத்த வந்த போலி வருமான வரித்துறை அதிகாஅரி

தீபா வீட்டிற்கு ரெய்டு நடத்த வந்த போலி வருமான வரித்துறை அதிகாஅரி

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரி என கூறிக்கொண்டு வந்த போலி நபர் காவல்துறை உதவி ஆணையர், ஆய்வாளர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார் இருந்தும் தப்பியோடியுள்ளார்.

சென்னை தியாகராயநகர் சிவஞானம் தெருவில் தீபாவின் வீடு உள்ளது. இங்கு இன்று காலை 5 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரி என கூறிக்கொண்டு வந்த நபர் சோதனைக்கு மற்ற அதிகாரிகள் 10 மணிக்கு வருவார்கள் என்று தெரிவித்தார். தனது பெயர் மிதேஷ்குமார் என்றும் வருமான வரித்துறை கூடுதல் ஆணையராக இருப்பதாகவும் அவர் கூறினார். அதற்கான அடையாள அட்டை சோதனை செய்வதற்கான வாரண்ட் போன்ற ஆவணங்களையும் அவர் வைத்திருந்தார். இதையடுத்து தீபா வீட்டில் இருந்து செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு சென்ற செய்தியாளர்களை அவர் சந்திக்க மறுத்தார். மேலும் வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளர்களையும் அவர் கைகளால் தடுத்தார்.

இதனால் அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து தீபா வீட்டுத் தரப்பில் இருந்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தியாகராயநகர் உதவி ஆணையர் செல்வன், காவல் ஆய்வாளர் சேகர், துணை ஆய்வாளர் ராஜேந்திரன் 6 ஆண் போலீசார் 4 பெண் போலீசார் ஆகியோர் தீபா வீட்டுக்கு வந்தனர். அவர்கள் அந்த நபர் வைத்திருந்த அடையாள அட்டை வாரண்ட் போன்ற ஆவணங்களை வாங்கி சோதனை செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடீரென அவர் தீபா வீட்டின் சுற்றுச் சுவரை ஏறிக் குதித்து தப்பியோடினார்.

அவரை போலீசாரும் செய்தியாளர்களும் விரட்டிச் சென்றனர். உதவி ஆணையர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் இருந்தும் தப்பிச் சென்ற போலி நபரை மடக்கிப்பிடிக்க முடியவில்லை. இதன் பின்னர் அந்த நபர் வைத்திருந்தது போலி அடையாள அட்டை மற்றும் வாரண்ட் என்பது தெரியவந்தது.

Leave a Reply