துர்கா என்ற வடசொல்லின் தமிழ் வடிவமே துர்க்கை ஆகும். துர்க்கம் என்றால் மலை, அரண், மலைக்கோட்டை, அகழி என பொருள்படும். எதிரிகள் ஒரு நாட்டிற்குள் புகமுடியாதபடி தடுப்பவை இவை. அதுபோல மனிதர்களுக்கு வரும் துன்பங்களை துர்காதேவி தடுத்து நிறுத்துகிறாள். எனவே இவர் துர்க்கை என பெயர் பெற்றாள். வீரத்திற்கு எடுத்துக்காட்டான தெய்வம் இவள். பெண்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும். என்பதை சுட்டிக் காட்டுவதற்காக இவள் வடிவமைக்கப்பட்டாள்.
துர்கா என்ற வடசொல்லை த், உ, ர், க், ஆ என்ற ஐந்து எழுத்துக்களாக பிரிப்பர்.
த் என்றால் அசுரர்களை அழித்தல் அல்லது தீய எண்ணங்களை அழித்தல்
உ என்றால் பக்தர்களுக்கு ஏற்படும் இடைஞ்சல்களை நீக்குதல்.
ர் என்றால் ரோகங்களை குணமாக்குதல்.
க் என்றால் பாவங்களை நீக்குதல்.
ஆ என்றால் பயத்தையும், எதிரிகளையும் அழித்தல்.
இந்த ஐந்து கடமைகளையும் செய்கிறாள் துர்காதேவி. அதர்வண வேதத்தில் துன்பங்களிலிருந்து நம்மை காப்பவள் என்பதால் துர்கா என பெயர் வந்ததாக சொல்லப்பட்டுள்ளது. இக்கட்டான நிலையில் சிக்கித் தவிப்பவர்களையும், தீராத துன்பங்களால் விரக்தி அடைந்து இருப்பவர்களையும் இவள் காப்பாற்றுவாள். ஜெய் ஸ்ரீதுர்கா என யார் கூறினாலும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும். துர்க்கையை, வனதுர்கா, சூலினி துர்கா, ஜாதவேதோ துர்கா, சாந்தி துர்கா, சபரி துர்கா, ஜ்வால துர்கா, தீப துர்கா, லவண துர்கா, ஆசூரீ துர்கா என ஒன்பது வடிவங்களாக நவதுர்கா என்ற பெயரில் வணங்குகின்றனர்.