கறுப்பான முடி இப்போது ஓல்டு ஃபேஷனாகிவிட்டது. பச்சை, மஞ்சள், ஆரஞ்சு என வாரத்துக்கு ஒரு கலரில் முடியை மாற்றுவது தான் இப்போதைய ஃபேஷன். இயற்கைக்கு மாறாக, தலைமுடியை செயற்கையான நிறத்துக்கு மாற்றுவது சரிதானா?
அழகுக்கலை நிபுணர் சோபியா கூறுவது என்ன?
”பொதுவாக, ஹேர் கலரிங் என்பதே ஆபத்தானதுதான். பல்வேறு விதமான பக்க விளைவுகள் வர வாய்ப்பு உண்டு. முன்பெல்லாம், தலைமுடியில் நரை விழுந்தவர்கள் மட்டும்தான் ஹேர் கலரிங் செய்துகொள்வார்கள். ஆனால், இன்று டீன் ஏஜிலேயே கலரிங் செய்துகொள்கிறார்கள்.
சிலர் கொஞ்ச நேரத்துக்கு மட்டும் முடியின் நிறத்தை மாற்றிக் கேட்பார்கள். ஒருநாள், ஒரு வாரம், ஒரு மாதம் செய்துகொள்ளும் தற்காலிக ஹேர் கலரிங் முதல் நிரந்தர ஹேர் கலரிங் வரை, பல வகைகளில் இது செய்யப்படுகிறது. எத்தனை முறை சாயம் ஏற்றுகிறோம் என்பதைப் பொறுத்தே ஹேர் கலரிங்கின் கால அளவு அமைகிறது. எவ்வளவு கால அளவுக்கு ஹேர் கலரிங் செய்கிறோம் என்பதைப் பொறுத்து, அதற்காக சேர்க்கப்படும் க்ரீம்கள் மாறுபடும்.
ஹேர் கலரிங் எப்படிச் செய்கிறார்கள்?
முதலில் தலைமுடியை நன்றாக அலசி, தலைமுடியில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் நீக்கி டிரையர் மூலம் காயவைக்கிறோம். பிறகு அவர்கள் விரும்பும் வண்ணத்தில், விரும்பும் கால அளவுக்கு ஏற்ப, அதற்குரிய சாயம் முடியில் அடிக்கப்படும். இந்த முறையில் தலைமுடியை நான்கு பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவாக தலையில் இருந்து 2 செ.மீ அளவுக்கு முடியை விட்டுவிட்டு, அதற்கு மேல் பகுதியில்தான் சாயம் ஏற்றப்படுகிறது. தலைமுடி முழுவதும் நரைத்திருந்தால் மட்டும், தலைமுடியின் அடிப்பாகத்தில் இருந்து முழுவதுமாக சாயம் ஏற்றப்படும். தற்காலிகமாக ஹேர் கலரிங் செய்துகொள்பவர்கள் என்றால், எத்தனை நாட்களுக்கு கலரிங் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அத்தனை நாட்களுக்கு தலைக்குக் குளிக்கக் கூடாது.
நிரந்தரமாக ஹேர் கலரிங் செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு, ஹேர் கலரிங் செய்தவுடன் 40 நிமிடங்கள் முடியை நன்றாகக் காயவைத்து, பின்னர் ஷாம்பூ, கண்டிஷனர், முடிக்கான மாஸ்க் (Hair Mask) ஆகியவை கலந்த ‘ஹேர் ஸ்பா’ செய்யப்படுகிறது. இதுதான் ஹேர் கலரிங் செய்யப்படும் முறை.
டை அடிப்பதும் ஹேர் கலரிங் செய்வதும் ஒன்று தான். தலைமுடி முழுவதும் நரைத்தவர்கள் வீட்டில் டை அடித்துக்கொள்ளலாம். ஆனால் சில முடிகள் மட்டும் நரைத்திருந்தால், தாங்களாகவே டை அடித்துக்கொள்வது தவறு. தலை வழுக்கையான பகுதியில் டை பட்டுவிட்டால், பல்வேறு தோல் அலர்ஜி பிரச்னைகள் வரலாம். மேலும், நிரந்தரமாக முடி நரைத்துவிடும். எனவே தரமான பொருட்களைப் பயன்படுத்தும் அனுபவமிக்க பார்லர்களில் மட்டும் ஹேர் கலரிங் செய்து கொள்வது நல்லது.
ஹேர் கலரிங் செய்தவர்கள் அதன் பிறகு, கண்டிஷனர் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். மாதம் ஒருமுறையேனும் ஹேர் ஸ்பா செய்துகொள்ள வேண்டும். இவையெல்லாம் கலரிங் செய்துகொண்டவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள். அதிக ரசாயனம் சேர்த்த தரமற்ற ஷாம்பூ, கிரீம்களைப் பயன்படுத்தினால், முடி சீக்கிரம் வலுவிழந்து கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே, கவனம் தேவை!
ஹேர் கலரிங் செய்து கொள்வதால்வேறு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா?
மாயா வேதமூர்த்தி, தோல் மருத்துவர்
பொதுவாக நமது முடி என்ன நிறத்தில் இருக்கிறதோ, அதில் இருந்து மிகச்சிறிதளவு வேறுபடும் கலரில் மட்டுமே கலரிங் செய்துகொள்ளலாம். உதாரணத்துக்கு, கருமை நிறத்தில் முடி இருப்பவர்கள் மெல்லிய பிரவுன் நிறத்தில் கலரிங் செய்துகொள்ளலாம். அதை விடுத்து கிரே, ஆரஞ்சு என வித்தியாசமான கலரில், கலரிங் செய்துகொள்வது தலைமுடிக்கு ஆபத்து. ஹேர் கலரிங் செய்வதால் அலர்ஜி, முடி உதிர்தல், உடைதல் போன்ற பிரச்னைகள் வரலாம். ஹேர் கலரிங் செய்துகொள்வதால் முடிக்கு மட்டுமின்றி சில சமயங்களில் கண்களும் பாதிக்கப்படும். களையான முகமும் கறுத்துப்போகும். கண்களைப் பாதிக்கும் கிளக்கோமா மற்றும் வெண்புள்ளிகள் போன்ற தோல் பிரச்னைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இதுவே, மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தி, நிம்மதியைக் குலைத்துவிடும்.
ஃபேஷனுக்காகச் செய்யும் இந்த கலரிங் முறை, உடலுக்கு உகந்தது அல்ல. மேலும் நிரந்தரமாக ஹேர் கலரிங் செய்துகொண்டவர்கள், மீண்டும் விரும்பினாலும், பழைய கருமை நிற முடியைப் பெற இயலாது. முடி முழுவதையும் எடுத்துவிட்டு, பிறகு மீண்டும் இயற்கையாக முடி முளைத்தால் மட்டுமே பழைய நிறம் சாத்தியம். இல்லையெனில், ஏற்கனவே கலரிங் செய்யப்பட்ட முடியை மீண்டும் இயற்கையான முடியின் நிறத்துக்கு கலரிங் செய்துகொள்ளவேண்டும். பார்லர்களில் பயன்படுத்தும் க்ரீம்களில் ‘லெட் அசிட்டேட்’ கலந்திருக்கலாம். அவ்வாறு ‘லெட் அசிட்டேட்’ கலக்கப்பட்ட க்ரீம்களை தலைமுடியில் பூசினால், அது தோல் புற்றுநோயை வரவழைக்கக் கூடும். எனவே, தரமான க்ரீம்களைப் பயன்படுத்தும் பார்லர்களில் மட்டும் ஹேர் கலரிங் செய்துகொள்ளவும்’.