இறந்து கொண்டிருந்த நதிக்கு உயிரூட்டிய இகோ பாபா!
பஞ்சாப் மாநிலத்தின் பீஸ் ஆற்றின் கிளை ஆறான ‘காலி பெய்ன்’, மிதக்கும் ஒரு அழகிய நந்தவனம் போல் இன்று காட்சி அளிக்கிறது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் அதனை பார்த்திருந்தால் அதிர்ச்சியாகி இருப்பீர்கள்.
அந்த ஆற்றை சாதரணமாக கடந்து விட முடியாது. குப்பைகளும் கழிவுகளும் விரவி, ஆற்றின் அடையாளத்தை தேடும் அளவுக்கு அசுத்தத்தின் எல்லையை தொட்டிருந்தது அப்போது.
இன்று அதே காலி பெய்ன் கிளையாற்றில் பலவித பறவைகள் பாடித்திரிகின்றன. இயற்கை ஆர்வலர்கள் படையெடுத்துவந்து கண்டுகளித்து செல்லும்வகையில் இயற்கையின் இன்னொரு அழகு பீறிடுகிறது அங்கு.
இந்த சாதனைக்கு காரணம் ஒரு அரசோ அல்லது அமைப்போ அல்ல; ஒரு தனிமனிதர். சான்ட் பல்பீர் சிங் சீச்சேவல் (Sant Balbir Singh Seechewal) என்கிற ஒற்றை மனிதர்தான் இந்த சாதனையை நிகழ்த்தியவர்.
அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டிருந்த காலி பெய்னை சுத்தப்படுத்த, சில ஆண்டுகளுக்கு முன்னர் பல்பீர் சிங் சில தன்னார்வலர்களோடு முன்வந்தார். மக்கள் அவரை விநோதமாக பார்த்தனர். முடிந்துபோன ஒரு விஷயத்தை புதுப்பிக்க நினைக்கும் அவரை பைத்தியமோ என்று கூட சிலர் விமர்சனம் செய்தனர்.
விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு, ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் இரவு பகலாக தன்னார்வலர்களோடு உழைத்தார் சான்ட் பல்பீர் சிங் சீச்சேவல். வறண்டு போய் இருந்த ஆற்றுப்படுகைகளை தூர்வாரினார், அதனைச் சுற்றி மரக்கன்றுகளை நட்டு பாதுக்காத்தார். நாளுக்கு நாள் ஆறு பொலிவு பெறத்துவங்கியது.
ஓரளவு ஆறு பழைய நிலைக்கு திரும்பியபின், அடுத்தகட்டமாக ஆற்றின் கரையோரம் வாழும் மக்களை நேரில் சந்தித்து, இனியும் அவர்கள் ஆற்றில் கழிவுகளை கொட்டினால், வருங்காலத்தில் அவர்கள் சந்திக்கக்கூடிய கேடுகளை எடுத்துக்கூறினார். தொடர்ந்து அந்த மக்களிடையே விழிப்புணர்வு கூட்டங்களையும் நடத்தினார். மேலும் தண்ணீரை சுத்திகரித்து அதனை விவசாயத்திற்கு பயன்படுத்தும் கட்டமைப்பு ஒன்றையும் அந்த மக்களுக்கு ஏற்படுத்தி தந்தார்.
இதனால் இந்த ஆற்றை சுற்றியுள்ள கிராமங்களில் நிலவி வந்த தண்ணீர் பஞ்சம் நீங்கியது. இன்று செழிப்பான விவசாயத்தை மேற்கொள்கின்றனர் அவர்கள். இகோ பாபாவின் முயற்சியை பார்த்து வியந்த மத்திய அரசு, இதே போல கங்கை ஆற்றையும் சீர்படுத்த ஒரு மாதிரி அமைத்து தருமாறு அவரிடம் கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் வாழ்வை மீட்டுத்தந்த இந்த மாமனிதரை அப்பகுதி மக்கள் செல்லமாக ‘இகோ பாபா’ என்று அழைத்து, தங்கள் நன்றியை வெளிப்படுத்துகின்றனர். இயற்கை ஆர்வலரான இகோ பாபா, இந்த பணியுடன் தன் இயற்கை மீதான காதலை நிறுத்திக்கொள்ளாமல் நர்சரி ஒன்றை அமைத்து ஆண்டுதோறும் பல லட்சம் மரக்கன்றுகளை இலவசமாக மக்களுக்கு வழங்கி வருகிறார்.
இவரின் மகத்தான இந்த சேவையை அங்கீகரிக்கும் விதமாக, ‘டைம்ஸ்’ பத்திரிகை ‘ஹீரோ ஆப் என்விரான்மன்ட்’ என்ற விருதினை இவருக்கு அளித்து கவுரவித்துள்ளது. இவ்விருதினை பெரும் முதல் ஆசிய மனிதர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
தனியாளாக 160 கிலோ மீட்டர் நீளமுள்ள ஒரு ஆற்றை சுத்தப்படுத்தி அழகாக்கியிருக்கும் இகோ பாபாவிற்கு ஒரு ராயல் சல்யூட்.
இயற்கையை நேசித்து வாழும் இவரைப்போன்ற மனிதர்கள் இந்தியாவில் இருப்பது இறைவன் இயற்கைக்கு அளித்த கொடை எனலாம்