மேட்டூர் அருகே தொடர்ந்து 2 நாட்களாக நில அதிர்வு. அச்சத்தில் பொதுமக்கள்
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் மழை, மற்றும் வெள்ளத்தால் தத்தளித்து வரும் நிலையில் மேட்டூர் அருகே உள்ள பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் நில அதிர்வு ஏற்பட்டதால் அந்த பகுதியின் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த பூமனூர் என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் திடீரென நில அதிர்வு ஏற்பட்டு வீடுகள் கடைகள் மற்றும் குலுங்யதால் அங்குள்ள பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு தஞ்சம் அடைந்தனர்.
நேற்று முன் தினம் ஏற்பட்ட நில அதிர்வின் அச்சத்தில் இருந்தே இன்னும் அந்த பகுதி மக்கள் மீளாத நிலையில் நேற்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. நிலஅதிர்வு ஏற்பட்ட போது பயங்கர சப்தம் ஏற்பட்டதாகவும், வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்ததாகவும், இந்த நில அதிர்வினால் அப்பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த நில அதிர்வு குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் எந்த தகவலும் பதியவில்லை என்று கூறப்படுகிறது. வெளிநாடுகளில் அல்லது வெளி மாநிலங்களில் நில அதிர்வு ஏற்பட்டால் இந்த வானிலை மையத்தில் உள்ள சிஸ்மோ கிராபி கருவியில் பதிவாகும் நிலையில் பூமனூர் கிராமத்தில் ஏற்பட்ட நில அதிர்வு இந்த கருவியில் பதிவாக வில்லை என்பது பெரும் குழப்பத்தை ஏறபடுத்தி உள்ளது
English Summary: Earth Quake observed near Mettur for second day