தற்போது நிகழும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி குறித்த எச்சரிக்கைகளை விஞ்ஞானிகள் மட்டுமே அதற்குரிய கருவிகள் மூலம் கண்டுபிடித்து பொதுமக்களை எச்சரிக்கை படுத்த முடியும். ஆனால் சில நேரங்களில் இந்த எச்சரிக்கை பொதுமக்களை சென்றடைய காலதாமதம் ஆகிவிடுவதால் உயிரிழப்பு மற்றும் பொருள் இழப்பு அதிகமாகி வருகிறது. இதை தடுப்பதற்காக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி, நிலநடுக்கம் ஏற்பட போவதை முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் ஆப்ஸ் ஒன்று கண்டுபிடிக்கப்படவுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஜி.பி.எஸ். உள்ள ஸ்மார்ட்போன்களில் ஆப்ஸை இன்ஸ்டால் செய்து நிலநடுக்கம் ஏற்படுவதை சிறிது நேரத்திற்கு முன்பாகவே உணர்த்திவிடும் வகையில் புதிய ஆப்ஸ் உருவாக்கவிருப்பதாகவும் இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும், தங்கள் உடமைகளை பாதுகாத்து கொள்ளவும் முடியும் என அறிவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.
இந்த ஆப்ஸ் தயாரிக்கப்படவுள்ள விதம் குறித்த முழு விவரங்கள் அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்படும் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த ஆப்ஸ் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
பெரிய மற்றும் நடுத்தர பூகம்பங்களை மட்டுமே இந்த ஆப்ஸ் மூலம் உணர முடியும் என்றும் சிறிய அளவிலான நிலநடுக்கத்தை ஜி.பி.எஸ். ஸ்மார்ட்போன்களால் உணரமுடியாது என்றும் அவ்வகை பூகம்பங்களை விஞ்ஞானிகள் மட்டுமே உணர்ந்து அறிவிக்க முடியும் என்றும் அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.