யாரை வேண்டுமானாலும் ஏமாற்றி விடலாம்… தப்பு செய்துவிட்டு சக்தி தேவியிடம் ஓடினால் தாய் பாசத்தோடு அணைத்துக் கொள்வாள். சிவன் தலையில் இரண்டு குட்டி குட்டி சேர்த்துக் கொள்வார். மாயக்கண்ணன், ஏதாவது கள்ளத்தனம் செய்து சிறிதளவு சோதிப்பதோடு நிறுத்திக் கொள்வான். ஆனால், இந்த சனீஸ்வரன் இருக்கிறாரே… கடவுளாக இருந்தாலும் கூட தன் வேலையைக் காட்டிவிடுவார். ஏனென்றால், அவன் சிவனுக்குரிய ஈஸ்வரப்பட்டத்தைப் பெற்றவன். சிவன் வகுத்த சட்ட திட்டங்களை பக்தர்கள் சரிவர நிறைவேற்றுகிறார்களா என்று சோதிப்பவன். ஒருமுறை சிவபார்வதியின் நடன நிகழ்ச்சி கைலாயத்தில் நடக்க இருந்தது. இதற்காக பிரமாண்ட அரங்கத்தை நிர்மாணித்தாள் பார்வதிதேவி, நடன நேரமும் குறிக்கப்பட்டது. சிவன் பார்வதியிடம், தேவி! நீ குறித்துள்ள நேரம் சனீஸ்வரனின் பார்வை நம் அரங்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ள இடத்தில் படும் நேரம். அந்நேரத்தில் நடனம் துவங்கினால் அரங்கம் எரிந்து விடும். எனவே, வேறுநேரம் குறிப்போமே! என்றார். பார்வதி கலகலவென நகைத்தாள். லோக நாயகரே! தாங்களும், உலகாளும் நானும் தான் நவக்கிரககங்களையே படைத்தோம். அவர்களுக்கு நாம் கட்டுப்படலாமா? தாங்கள் சொல்வது நகைப்பாக இருக்கிறது, என்றாள்.
தேவி! சட்டத்தை இயற்றுபவர்களே அதை மீறினால், உலகத்தினர் எப்படி அதை மதித்து நடப்பார்கள்? நீ சொல்வது சரியல்ல. நேரத்தை மாற்று என்றார் சிவன். பார்வதிக்கு கோபம் வந்துவிட்டது. ஈசனே! ஒரு கிரகத்துக்கு பயந்து நேரத்தை மாற்றமாட்டேன். நீங்கள் சனீஸ்வரனிடம் போய், அரங்கத்தை எரிக்கக் கூடாது என நான் சொன்னதாக உத்தரவிட்டு வாருங்கள். அவன் கேட்க மறுத்தால், உங்கள் உடுக்கையை ஒலியுங்கள். அதன் சப்தம் கேட்டதும், அவன் அரங்கத்தை அழிப்பதற்குள் நானே இதை எரித்து விடுகிறேன், என்றாள். சிவனும் சனீஸ்வரனிடம் சென்றார். விஷயத்தைச் சொன்னதும் ஐயனே! என்னைப் படைத்ததாயின் கட்டளையை நான் மீறுவேனா? அதிலும் தாங்களும், அம்பிகையும் ஆடும் நடனத்தைக் காண எனக்கும் ஆசை இருக்காதா? நீங்கள் அதை இங்கேயே ஆடிக் காட்டுங்கள். எனது லோகத்திலேயே உங்கள் திருநடனம் நிகழ ஆசைப் படுகிறேன், என்றார் சனி பகவான். சனீஸ்வரனின் வேண்டுகோலை ஏற்று சிவன் உடுக்கையை ஒலித்தபடியே நடனமாடத் தொடங்கினார்.உடுக்கை சப்தம் கேட்டதோ இல்லையோ, சனீஸ்வரன் தன் கோரிக்கையை ஏற்கவில்லையோ எனக்கருதிய அம்பிகை, தான் நிர்மாணித்த அரங்கத்தை, தன் பார்வையாலேயே எரித்து விட்டாள்.
சனீஸ்வரனின் கடமை உணர்வைப் பார்த்தீர்களா? தெய்வங்களையே அவர் இப்படி படுத்துகிறார் என்றால், நம்மை விட்டு வைப்பாரா என்ன? நாம் நமது பணிகளை நல்ல முறையில், ஒழுக்கமான முறையில் கவனித்தால் நம்மை அவர் ஏதும் செய்யமாட்டார். புரிகிறதா?