OLX-ல் பழைய பொருள்கள்தான் கிடைக்கும். பத்து நாள் குழந்தையுமா கிடைக்கும்? அதிர்ச்சி தகவல்
OLX என்ற இணையதளத்தில் நமக்கு தேவையில்லாத பொருட்களை விற்கவோ அல்லது நமக்கு தேவையான பொருளை வாங்குவதற்கோ உதவும் ஒரு இணையதளம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பிரேசில் நாட்டில் உள்ள ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை இந்த இணையதளத்தில் விற்க முயற்சி செய்துள்ளார். அதுவும் அந்த குழந்தை பிறந்த வெறும் பத்தே நாட்கள் ஆன நிலையில். இதுகுறித்த்த பரபரப்பான செய்தி பின்வருமாறு….
தென்கிழக்கு பிரேசில் பகுதியை சேர்ந்த அபிமாயல் கோஸ்டா என்பவருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தையை புகைப்படம் எடுத்த அபிமாயல், OLX இணையதளத்தில் இந்த குழந்தை விற்பனைக்கு என்றும் பிறந்து பத்தே நாட்கள் மட்டுமே ஆன இந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாகவும் விளம்பரம் செய்திருந்தார். குழந்தையின் விலையையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த இணையதள விளம்பரத்தை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு புகார் கொடுக்க, அதில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி நம்பரை வைத்து அவருடைய முகவரியை கண்டுபிடித்த போலீஸார் அவரை கைது செய்தனர். தனக்கு குழந்தையை விற்கும் எண்ணம் இல்லை என்றும் சும்மா விளையாட்டிற்காக அந்த விளம்பரத்தை தந்ததாகவும் அபிமாயல் கூறியும் போலீஸார் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த குழந்தையின் தாய் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், எதற்காக தனது கணவர் இவ்வாறு செய்தார் என்றே தனக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
Chennai Today News: eBaby: Dad arrested after he tries to sell his own 10-DAY-OLD tot on the internet