ஜெயலலிதாவின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் தானா? தேர்தல் ஆணையத்தின் புதிய முடிவால் அதிமுகவினர் அதிர்ச்சி
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை நடத்த தயார் என்றும் ஆனால் அதற்கு சில சட்டமன்றங்களின் பதவிக்காலத்தை முன்கூட்டியே முடிக்கவோ அல்லது பதவிக்காலத்தை நீட்டிக்கவோ செய்ய வேண்டி நிலை ஏற்படும் என்றும் அதற்கு அரசியல் சட்டத்தை திருத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த கருத்து உறுதியானால் ஜெயலலிதாவின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளுக்குள் முடிந்துவிடும் என்பதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 1951-52 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் 1957, 1962, 1967 என ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இரு அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் 1968, 1969 ஆகிய ஆண்டுகளில் முன்கூட்டியே சில மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டதால், இந்த நடைமுறை மாறி தனித்தனியாக தேர்தல் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று கடந்த டிசம்பர் மாதம் மத்திய சட்ட அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது. இதனையடுத்து நாடாமன்ற நிலைக்குழுவின் யோசனை குறித்து, தேர்தல் ஆணையத்திடம் மத்திய சட்ட அமைச்சகம் கருத்து கேட்டது. அதற்கு தேர்தல் கமிஷன் முதல்முறையாக தனது அதிகாரபூர்வ கருத்தை கடிதம் மூலம் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ”ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவது இயலாத காரியமில்லை. இந்த விவகாரத்தில் ஒருமித்த அரசியல் கருத்து எட்டப்பட்டால், இந்த யோசனையை முன்னெடுத்துச் செல்ல ஆணையம் தயாராக உள்ளது. ஒரே நேரத்தில் அனைத்து மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கான கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதிகளை நிறுவ, நாடு தகுதி பெறுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.