ஒரே நாளில் ஆறரை லட்சம் மரக்கன்றுகள். ஈகுவடார் நாட்டு மக்கள் கின்னஸ் சாதனை

treeதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் நாட்டில் ஒரே நாளில் 6,47,250 மரக்கன்றுகள் நட்டு புதிய கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தென் அமெரிக்க நாடான ஈக்வடார் நாட்டின் அதிபர் ரஃபயல் கொரியா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். பசுமைத் திட்டத்தின் கீழ், பல்வேறு மண் வளம்கொண்ட நாட்டின் பல பகுதிகளில் வெவ்வேறு வகை மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, நாடு தழுவிய அளவில், ஒரே நாளில் மொத்தம் 2,000 ஹெக்டேர் பரப்பளவில் 44,883 பேர் மரக்கன்றுகள் நடும் பணியில் நேற்று முன் தினம் காலை முதல் மாலை வரை  ஈடுபட்டனர். ஒரே நாளில் 6,47,250 மரக்கன்றுகள் நடப்பட்டன. இது உலக சாதனையாகும். இதற்கு முன்னர் ஒரே நாளில் மிக அதிக மரங்களை நட்டதாக பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு அமைப்பு கின்னஸ் சாதனை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வார காலத்தில் அதிக அளவில் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்வது உள்ளிட்ட பல உலக சாதனைகள் புரிந்ததற்காக, ஈக்வடார் நாடு ஏற்கனவே கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply