நீரவ் மோடியின் ரூ.5100 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் பறிமுதல்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்படும் வைர வியாபாரியான நீரவ் மோடிக்கும் அவரது நண்பர்களுக்கும் சொந்தமான ரூ.5100 மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரங்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
நீரவ் மோடி மீது கடந்த ஜனவரி மாதமே மோசடி குறித்த குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதனால் அவர் கடந்த மாதமே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து தொழிலதிபர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்படத்தில் பிரதமர் மோடியுடன் நீரவ் மோடியும் இருப்பதால் அவர் சுவிஸ் நாட்டில் இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் அவர் எங்கு இருக்கின்றார் என்பது குறித்து இன்னும் உறுதி செய்யவில்லை.
இந்த நிலையில் நேற்று அமலாக்கத்துறையினர நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், நிரவ் மோடி மற்றும் அவரது நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே இந்த விவகாரம் குறித்து அமலாக்கத் துறையிடம் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.