தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 21 ஆனது. சபாநாயகருடன் முதல்வர் திடீர் சந்திப்பு
சசிகலா குடும்பத்தினர்களின் கட்டுப்பாட்டில் இருந்து மீண்டுவிட்டதாக கருதப்பட்ட அதிமுக அம்மா அணியில், தினகரன் ஜாமீனில் இருந்து வெளிவந்தவுடன் திடீர் குழப்பம் ஏற்பட்டது. இன்று காலை தினகரனுக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏக்கள் இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 21ஆக மாறிவிட்டது. மேலும் இந்த எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்கும் என தெரிகிறது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்று முன்னர் சபாநாயகர் தனபால் அவர்களை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை செய்தார். அதுமட்டுமின்றி இன்று மதியம் 3 மணிக்கு முதலமைச்சர் பழனிசாமி 9 மாவட்ட அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கவுள்ளதாகவும் இந்த சந்திப்பின்போது முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
அதிமுகவில் நிலவி வரும் இந்த குழப்பங்கள் குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியபோது, ‘சட்டப்பேரவை கூடுவதற்குள் அ.தி.மு.க ஆட்சி நிலைக்குமா என்பது கேள்விக்குறிதான். தற்போது அ.தி.மு.க மூன்று அணிகளாக பிரிந்துள்ளதுடன், எத்தனை அணிகளாக உடையும் எனத் தெரியவில்லை. ஆட்சி நிலைத்து பேரவைக் கூடினால், திமுக தனது ஜனநாயகக் கடமையை ஆற்றும்’ என்று தெரிவித்துள்ளார்.