பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம். பள்ளி மாணவர்களை கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித்துறை அதிரடி

பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம். பள்ளி மாணவர்களை கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித்துறை அதிரடி
students
சென்னை உள்பட பெருநகரங்களில் பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் செல்லும்போது படிக்கட்டுக்களில் ஆபத்தான பயணம் செய்தை கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி பள்ளி மாணவர்கள் அனைவரும் பஸ் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்ய மாட்டேன் என  வாரம் ஒரு முறை உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள உத்தரவு ஒன்றில் கூறியிருப்பதாவது, “இந்திய தேசிய குற்றவியல் அறிக்கையின் படி இந்தியாவில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் சாலை விபத்தில் இறக்கின்றனர். உலக அளவில் வாகன எண்ணிக்கையில் இந்தியா ஒரு சதவீதத்தை மட்டும் கொண்டிருந்தாலும், விபத்துகள் நடப்பதில் 10 சதவீதமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் சாலைவிதிகளை மீறுவதே ஆகும்.

விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கமும், தனியார் தொண்டு நிறுவனம் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்பு உள்ளது. இதை கருத்தில்  கொண்டு மாணவர்களிடம் விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தினால் அவர்களின் பெற்றோர், உறவினர்களிடையே மட்டும் இல்லாமல் சமுதாயத்திலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

பள்ளிக்கல்வித் துறை பள்ளிகளில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வாரத்தில் ஒருநாள் அனைத்து பள்ளிகளிலும், காலை வழிப்பாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும். அப்போது, நான் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவேன், நான் நன்றாக பழகிய பின்பே வாகனம் ஓட்டுவேன், நான் ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகே வாகனம் ஓட்டுவேன், நான் என் பெற்றோர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட், ஹெல்மெட் அணிந்து கொள்ள வற்புறுத்துவேன்  என்று உறுதி மொழி எடுக்க வேண்டும்.

மேலும், நான் என் ஓட்டுநர் வேகக்கட்டுப்பாட்டை மீறாதவாறு பார்த்துக்கொள்வேன், நான் என் ஓட்டுநர் வாகனத்தை ஓட்டும்போது செல்போன் உபயோகிப்பதை அனுமதிக்க மாட்டேன், நான் என் ஓட்டுநர் அசதியாக இருக்கும் போது வாகனம் ஓட்ட அனுமதிக்க மாட்டேன், நான் ஆட்டோ அல்லது வேனில் பயனித்தால் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றுவதை அனுமதிக்க மாட்டேன், நான் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்ய மாட்டேன் ஆகிய உறுதி மொழிகளை மேற்கொள்ள வேண்டும்’

இவ்வாறு பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இவருடைய புதிய முயற்சி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

Leave a Reply