தமிழகத்தில் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் முதல்வர் ஜெயலலிதாவின் ‘அம்மா உணவகம்’ எகிப்து நாட்டிலும் தொடங்க இருப்பதாக அந்நாட்டின் வணிக அமைச்சர் கூறியுள்ளார்.
நேற்று சென்னை வந்த எகிப்து வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சக அதிகாரி அடெல் ரசக் என்பவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவடு: ” அம்மா உணவகம் குறித்து ஊடகங்களில் அடிக்கடி கேள்விப்பட்டதால் அதை நேரில் பார்வையிட்டு, அதைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தோம். இத்தகைய முயற்சிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மட்டுமே எங்களது நாட்டில் மேற்கொள்கின்றன. ஆனால் இங்கு அரசாங்கமே இப்படிப்பட்ட திட்டத்தை கொண்டு வந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை தருகிறது. விரைவில் எங்கள் நாட்டிலும் இதுபோன்ற உணவகத்தை ஆரம்பிக்க உள்ளோம்” என்று கூறினார்.
பின்னர் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் அம்மா உணவகம் செயல்படும் முறைகள் குறித்தும் உணவுகள் தயாரிக்கப்படும் விதம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் அவர் மதுரை அம்மா உணவகத்தையும் பார்வையிட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.