எகிப்து நாட்டில், காவல் நிலையத்தை கண்மூடித்தனமான தாக்கிய முன்னாள் அதிபர் முகமது மோர்ஸியின் ஆதரவாளர்கள் என கருதப்படும் 188 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் நேற்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் எகிப்து அதிபர் முகமது மோர்ஸி அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். மோர்ஸிக்கு பெரிதும் ஆதரவு கொடுத்த இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினர், கெய்ரோ, கிஸா ஆகிய நகரங்களில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு வன்முறைகளிலும் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் போராட்டக்காரர்கள் கேர்தாஸா என்ற நகரத்தின் காவல் நிலையத்தின் உள்ளே புகுந்து கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலால் அந்த காவல் நிலையமே நிலைகுலைந்தது.
இதுகுறித்து கடந்த ஓன்றரை வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கில் நேற்று அதிரடியாக தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 188 பேர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு நீதிபதி தீர்ப்பளித்தார். எகிப்து நாட்டின் சட்டப்படி, அந்தத் தீர்ப்பு அந்த நாட்டு தலைமை மதகுருவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 24-ஆம் தேதிக்குள் இந்த மரண தண்டனை உறுதி செய்யப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது