தேர்தல் நேரத்தில் பாமக விவேகமான முடிவை எடுக்கும். இல.கணேசன்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாநில கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி சுறுசுறுப்பாக கூட்டணி குறித்து ஆலோசனை செய்து வரும் நிலையில் இரண்டு தேசிய கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் இன்னும் எந்த கூட்டணியில் இணைவது என்ற முடிவை எடுக்காமல் திணறி வருகின்றது.
ஒருபுறம் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல், இளங்கோவன் – விஜயதாரிணி பிரச்சனை என சென்று கொண்டிருக்கும் நிலையில் மறுபக்கம் தங்களது கூட்டணியில் இல்லாத கட்சிகளை எல்லாம் தங்களுடன் இருப்பதாக பாஜக காட்டிகொண்டு வருகிறது.
விஜயகாந்தின் தேமுதிக, திமுகவுடன் கூட்டணி சேர ரகசியமாய் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பாமக முதல்வர் வேட்பாளரையும் அறிவித்து தனித்து நிற்க ஆயத்தமாகி வருகிறது. மதிமுக மக்கள் நல கூட்டணி என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன், ” கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க.வுடன் இருந்த கட்சிகளில் ம.தி.மு.க.வை தவிர்த்து பிற கட்சிகள் அனைத்தும் எங்களுடன் தான் இருக்கின்றன. அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பா.ம.க. எப்போதுமே வேகமாக செயல்படும் நடைமுறை கொண்ட கட்சி. நாடாளுமன்றத் தேர்தலின்போதும் முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து பா.ம.க., தே.மு.தி.க. பிரசாரத்தை தொடங்கினர். ஆனால், அதற்கு பின்னர் தங்களது வேட்பாளர்களை திரும்பப்பெற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டனர்.
பா.ம.க. வேகமாக செயல்படும் கட்சியாக இருந்தாலும் விவேகமாகவும் செயல்படும் கட்சியாக இருந்து வருகிறது. எனவே, தேர்தல் நேரத்தில் விவேகமான முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. முதல்வர் வேட்பாளரை அறிவிக்க இது தகுந்த நேரம் இல்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டப்பின் முதல்வர் வேட்பாளரை அறிவித்தால் போதுமானது. இந்திய மீனவர்கள் பிரச்னை பற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நன்கு புரிந்துவைத்துள்ளார். அதனால், உரிய நேரத்தில் இதற்கு தீர்வுகாணப்படும்’ என்று கூறியுள்ளார்